பிபர்ஜாய் புயல்: குஜராத்தில் 8,000 பேர் வெளியேற்றப்பட்டனர்
'பிபர்ஜாய்' புயல் தீவிரமடைந்து "அதிதீவிர புயலாக" மாறியுள்ளதால், குஜராத் கடற்கரைக்கு அருகிலுள்ள கிராமங்களை சேர்ந்த மக்கள் இன்று(ஜூன் 13) வெளியேற்றப்பட்டனர். இந்த புயல் வியாழக்கிழமை பிற்பகல் கட்ச் மற்றும் பாகிஸ்தானின் கராச்சி இடையே கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று காலை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பேரிடர் மேலாண்மை அமைச்சர்கள் கூட்டம் நடைபெற்றது. நேற்று உயர்மட்ட அதிகாரிகளுடன் அவசர கூட்டத்தை நடத்திய பிரதமர் மோடி, பாதிக்கப்படக்கூடிய இடங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்படுவதை உறுதிசெய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அதிக சேதத்தை ஏற்படுத்தக்கூடிய புயல்: வானிலை ஆய்வு மையம்
நேற்று மாலை குஜராத் முதல்வர் பூபேந்திர படேலுடன் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி, புயலின் நிலை குறித்து கேட்டறிந்தார். இந்த புயல் "அதிக சேதத்தை ஏற்படுத்தும்" என்றும், வியாழக்கிழமை அன்று இந்த புயல் கரையை கடக்கும் போது காற்றின் வேகம் மணிக்கு 150-கிமீ வேகத்தில் வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குஜராத்தின் கட்ச் மற்றும் சௌராஷ்டிரா மாவட்டங்களின் கடலோர கிராமங்களில் உள்ள மக்களை வெளியேற்றும் பணி இன்று தொடங்கப்பட்டது. இதுவரை 8,000 பேர் வெளியேற்றப்பட்டு, கட்ச் பகுதியில் உள்ள பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். ஏற்கனவே இரு மாவட்டங்களுக்கும் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஜூன் 15ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.