அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட 4 மாவட்ட செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு
தமிழ்நாடு மாவட்டத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழை தொடர்ந்து வெளுத்து வாங்கி வருகிறது. இதன் காரணமாக குறிப்பிட்ட அந்த 4 மாவட்டங்களில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைகழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் நடக்கவிருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. முன்னதாக, நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இன்று(டிச.,18)நடக்கவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாகவும், அந்த தேர்வுகள் வேறொரு நாளில் நடத்தப்படும் என்றும் அப்பல்கலைக்கழக துணை வேந்தர் சந்திரசேகர் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இந்நிலையில், தற்போது அண்ணா பல்கலைக்கழக தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதே போல் விருதுநகர் பொறியியல் கல்லூரிகளில் நடக்கவிருந்த தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வரலாறு காணாத மழை பொழிவு காரணமாக பெரும் சேதங்கள்
இதனையடுத்து, 4 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து நடந்து வரும் அரையாண்டு தேர்வுகளும் கனமழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கனமழை எச்சரிக்கை காரணமாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் இது குறித்த அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்ட காயல்பட்டினத்தில் மட்டும் கடந்த 24 மணிநேரத்தில் 93 செ.மீ. மழை பாதிவாகியுள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கிறது. 4 மாவட்ட நீர்நிலைகள், ஆறுகள் உள்ளிட்டவை நிரம்பி சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் வீடியோ பதிவுகள் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மற்றும் மாவட்ட சார்பில் எடுக்கப்பட்டிருந்த நிலையிலும் வரலாறு காணாத மழை பொழிவு காரணமாக பெரும் சேதங்கள் ஏற்பட்டு வருகிறது.