மணிப்பூர் கலவரம்: 4 பேர் கைது; முதல்வர் பதவி விலக மாட்டார் எனத்தகவல்
மணிப்பூரில் கடந்த மே மாதம் முதல் கலவரம் நடந்து வருகிறது. மே 3ஆம் தேதி முதல் மணிப்பூரின் மெய்தேய் மற்றும் குகி சமூகத்தினருக்கு இடையே இன மோதல்கள் நடந்து வருகின்றன. இதுவரை நடந்த மோதலில் 150க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். அதனை தொடர்ந்து அங்கே இணையசேவை முடக்கப்பட்டது. இரு தினங்களுக்கு முன்னர், மீண்டும் இணைய சேவை வழங்கப்பட்டதும், ஒரு வீடியோ வைரலானது. அதில், இரண்டு பழங்குடியின இளம் பெண்களை, ஆண்கள் கும்பல் ஒன்று நிர்வாணமாக்கி நடுரோட்டில் ஊர்வலமாக இழுத்து செல்வது போன்ற காட்சி உள்ளது. மேலும் அப்பெண்களை, அந்த கும்பல், கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்பட்டது. நாடு முழுவதும் கொந்தளிப்பை உண்டாக்கிய இந்த விவகாரத்தில், முதல்வர் பொறுப்பேற்று பதவிவிலக வேண்டுமென கோரிக்கை எழுந்ததது.
பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்ட வழக்கில் 4 பேர் கைது
இந்நிலையில், அந்த வீடியோ பதிவில் இருக்கும் ஆதாரத்தை வைத்து, நேற்று ஒருவர் அடையாளம் காணப்பட்டு, அவரை மணிப்பூர் காவல் துறை கைது செய்துள்ளதாக முதல்வர் பைரேன் சிங் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்டவர், தௌபால் மாவட்டத்தை சேர்ந்த ஹெரதாஸ் எனவும், அவர் தான் இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளி எனவும் கூறப்பட்டுள்ளது. மற்ற குற்றவாளிகளை பிடிக்க சிறப்பு படை அமைக்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் கூறினார். தொடர்ச்சியாக நேற்று மாலை, மேலும் மூவர் கைது செய்யப்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில், முதல்வரை பதவியிலிருந்து விலக்க, மத்திய அரசிற்கு எண்ணம் இல்லை எனவும், சட்ட ஒழுங்கை நிலை நாட்டுவது தான் தற்போதைய முக்கிய பிரச்னை என கருதுவதாகவும் கூறப்படுகிறது.