மணிப்பூர் பழங்குடியின பெண்கள் கற்பழிப்பு விவகாரம்: ஒருவர் கைது
மணிப்பூரில் கடந்த மே மாதம் முதல் கலவரம் நடந்து வருகிறது. மே 3ஆம் தேதி முதல் மணிப்பூரின் மெய்தேய் மற்றும் குகி சமூகத்தினருக்கு இடையே இன மோதல்கள் நடந்து வருகின்றன. இதுவரை நடந்த மோதலில் 150க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். அதன் உச்சகட்டமாக நேற்று ஒரு வீடியோ வெளியானது. அதில், இரண்டு பழங்குடியின இளம் பெண்களை, ஆண்கள் கும்பல் ஒன்று நிர்வாணமாக்கி நடுரோட்டில் ஊர்வலமாக இழுத்து செல்வது போன்ற காட்சி உள்ளது. மேலும் அப்பெண்களை, அந்த கும்பல், கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்பட்டது. நாடு முழுவதும் கொந்தளிப்பை உண்டாக்கிய இந்த விவகாரம், உச்ச நீதிமன்ற நீதிபதி முதல் மத்திய அரசின் அமைச்சர் ஸ்ம்ரிதி இரானி வரை பலராலும் கண்டிக்கப்பட்டது.
குற்றவாளி என கருதப்படும் ஒருவர் கைது
இந்த சம்பவத்தை அடுத்து, மணிப்பூர் முதல்வர் பைரேன் சிங் பதவி விலக வேண்டும் என கோரிக்கையும் வலுத்து வருகிறது. வன்முறையை கட்டுக்குள் கொண்டு வராதது, மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது என பல்வேறு குற்றசாட்டுகளை முன்வைத்து அவர் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் முழங்கி வருகின்றனர். இந்நிலையில், அந்த வீடியோ பதிவில் இருக்கும் ஆதாரத்தை வைத்து, பச்சை நிற சட்டை அணிந்து இருந்தவர் அடையாளம் காணப்பட்டு, அவரை மணிப்பூர் காவல் துறை கைது செய்துள்ளதாக முதல்வர் பைரேன் சிங் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்டவர், தௌபால் மாவட்டத்தை சேர்ந்த ஹெரதாஸ் எனவும், அவர் தான் இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளி எனவும் கூறப்பட்டுள்ளது. மற்ற குற்றவாளிகளை பிடிக்க சிறப்பு படை அமைக்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் கூறியுள்ளார்