உலகின் மிகவும் மாசுபட்ட நகரங்களின் பட்டியலில் 3 இந்திய நகரங்கள்
டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்துள்ள நிலையில், புது டெல்லியில் நச்சு தன்மை கொண்ட மாசு, மூடுபனி போல் நகரம் முழுவதையும் சூழ்ந்துள்ளது. இந்நிலையில், சுவிஸ் குழு IQAir உலகில் மிகவும் மாசுபட்ட நகரங்களின் தரவுகளை புதுப்பித்துள்ளது. இன்று காலை புதுப்பிக்கப்பட்ட அந்த தரவுகளின் படி, டெல்லி, கொல்கத்தா மற்றும் மும்பை ஆகிய 3 இந்திய நகரங்கள் உலகின் மிகவும் மாசுபட்ட நகரங்களின் பட்டியலில் உள்ளது. இன்று காலை 7.30 மணிக்கு டெல்லியின் காற்றின் தரம் 483 AQI இருந்ததை அடுத்து, இந்திய தலைநகரமான டெல்லி, நிகழ்நேர அதிக மாசுபட்ட நகரங்களின் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
டெல்லி வாசிகளுக்கு அதிகரிக்கும் உடல்நல கோளாறுகள்
அதைத் தொடர்ந்து, லாகூர்(பாகிஸ்தான்) 371 AQI உடன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. உலகின் மிகவும் மாசுபட்ட நகரங்களின் பட்டியலில் முதல் 6 இடங்களுக்குள் மும்பை மற்றும் கொல்கத்தாவும் இடம் பிடித்துள்ளன. இன்று காலை 7.30 மணிக்கு மும்பையின் காற்றின் தரம் 206 AQI ஆகவும், கொல்கத்தாவின் காற்றின் தரம் 162 AQI ஆகவும், இருந்தது. குறைந்த வெப்பநிலை, காற்றின் பற்றாக்குறை மற்றும் அண்டை மாநிலங்களில் எரியும் கழிவுகள் ஆகியவற்றின் கலவையானது காற்று மாசுபாட்டை அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த அதிக காற்று மாசுபாட்டினால், டெல்லியில் வசிப்பவர்களில் பலருக்கு கண்களில் எரிச்சல் மற்றும் தொண்டை அரிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.