'26 வார கருவை கொல்ல முடியாது': உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து
ஒரு பெண்ணின் 26-வாரக்கருவை கலைக்க அனுமதியளித்து கடந்த 9ம்தேதி உச்ச நீதிமன்ற பெஞ்ச் உத்தரவிட்டது. இந்த உத்தரவினை திரும்பப்பெற கோரி மத்திய அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது. அந்த மனு மீதான விசாரணையின் போது உச்ச நீதிமன்றம் இந்த கருத்தை பதிவிட்டுள்ளது. முன்னதாக, 'தனக்கு ஏற்கனவே 2 குழந்தைகள் உள்ளது. மனரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், தன்னால் இந்த 3வது குழந்தையை பெற்றெடுத்து வளர்க்க முடியாது. மேலும் தனக்கு மனஅழுத்தமும் உள்ளதால் மூன்றாவது முறையாக உருவாகியுள்ள கருவை கலைக்க அனுமதிக்க வேண்டும்' என்று மனுதாரர் தரப்பில் கூறப்பட்டதாக தெரிகிறது. இதற்கு, உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஹிமா கோலி, பி.வி.நாகரத்தினா உள்ளிட்டோர் அனுமதியளித்து உத்தரவிட்டிருந்தனர். இந்நிலையில் இதன் மீதான மேல்முறையீட்டு மனு, டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்னிலையில் வந்தது.
நாளை காலை ஒத்திவைக்கப்பட்ட வழக்கின் விசாரணை
அப்போது முறையீடு செய்த சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பாட்டீ, "கருக்கலைப்பின் பொழுது கரு உயிருடன் பிறப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளது". "இதனால் கருவை கொலை செய்ய வேண்டியிருக்கும் என்று மருத்துவ வாரியம் கூறியுள்ளது. எனினும் கருக்கலைப்புக்கு, நீதிபதிகள் அனுமதியளித்துள்ளார்கள்"என்று நேற்று(அக்.,11)கூறியுள்ளார். உடனே, கருக்கலைப்பினை நிறுத்தி வைக்குமாறு, எய்ம்ஸ் மருத்துவமனைக்கு, நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதனைத்தொடர்ந்து இன்று நடந்த விசாரணையில், 'எய்ம்ஸ் மருத்துவர்களிடம் கருவின் இதயத்துடிப்பினை நிறுத்துமாறு உத்தரவிடவேண்டும் என்று எதிர்பார்கிறீர்களா?'என்று மனுதாரர் வழக்கறிஞரிடம் கேள்வியெழுப்பியுள்ளனர். மேலும் நீதிபதிகள், 26 வாரங்கள் கருவை சுமந்த பெண் இன்னும் சிலவாரங்கள் சுமந்தால் ஆரோக்கியமான குழந்தை பிறக்குமே என்று கூறியதோடு, நாளை விசாரணையை ஒத்திவைத்தனர். அதேபோல, கருக்கலைப்பு குறித்து ஆலோசிக்க அந்த பெண்ணிற்கும் 24-மணி நேர அவகாசம் தந்தனர் நீதிபதிகள்.