விமானிகள், போதிய பயணிகள் இல்லாததால் சென்னையில் ரத்து செய்யப்பட்ட 22 விமானங்கள்
மிக்ஜாம் புயலால் மூடப்பட்ட விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டாலும், போதிய பயணிகள் மற்றும் விமானிகள் இல்லாததால், 22 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சென்னை விமான நிலையம் தெரிவித்துள்ளது. புயலால் கனமழை பெய்து வந்ததால், முதலில் திங்கட்கிழமை இரவு 11 மணி வரையில் விமான நிலையம் மூடப்பட்டது. பின்னர், வெள்ள நீர் வடியாததால் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி வரை, விமான நிலையம் இயங்காது என அறிவிக்கப்பட்டது. இதனால் சுமார் 250க்கும் விமான சேவைகள் தடைப்பட்டது. மேலும், தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்ல முடியாமல் பயணிகளும் விமான நிலையத்தில் சிக்கினர்.
சென்னையில் இருந்து புறப்படும் 10 விமானங்கள் தாமதமாக இயக்கம்
ஓடு பாதையில் இருந்த தண்ணீர் வடிந்ததை தொடர்ந்து, நேற்று காலை முதல் விமான நிலையம் மீண்டும் இயங்க தொடங்கியது. செவ்வாய்க்கிழமை விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தாலும் 114 விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டது. மேலும், இயக்கப்பட வேண்டிய 177 விமானங்களும் ரத்து செய்யப்பட்டதாக விமான நிலையம் தெரிவித்தது. தற்போது, விமான நிலையத்திற்கு போதிய பயணிகள் மற்றும் விமானிகள் வராததால், சென்னையிலிருந்து புறப்பட வேண்டிய 11 விமானங்களும், சென்னைக்கு வரவேண்டிய 11 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலையம் அறிவித்துள்ளது. மேலும், சென்னையில் இருந்து புறப்படும் 10க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.