Page Loader
பாலத்தில் இருந்து கவிழ்ந்து விழுந்த பேருந்து: மத்தியப் பிரதேசத்தில் 22 பேர் பலி
விபத்துக்கான காரணத்தை கண்டறிய விசாரணை நடைபெற்று வருகிறது

பாலத்தில் இருந்து கவிழ்ந்து விழுந்த பேருந்து: மத்தியப் பிரதேசத்தில் 22 பேர் பலி

எழுதியவர் Sindhuja SM
May 09, 2023
01:10 pm

செய்தி முன்னோட்டம்

மத்தியப் பிரதேசத்தின் கார்கோனில் உள்ள ஒரு பாலத்தில் இருந்து பேருந்து கவிழ்ந்து விழுந்ததால் குறைந்தது 22 பேர் உயிரிழந்தனர் என்றும் பலர் காயமடைந்தனர் என்றும் மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா தெரிவித்துள்ளார். 50 பேருடன் இந்தூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று, கார்கோனின் தசங்கா கிராமத்தில் உள்ள பாலத்தில் இருந்து கீழே விழுந்தது. தற்போது உள்ளூர் கிராமவாசிகளின் உதவியுடன் அவசரகால சேவைகள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளன. விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சமும், பலத்த காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும், சிறு காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரமும், நிவாரணமாக வழங்கப்படும் என மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார்.

details

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்: மத்திய அரசு 

மேலும், காயமடைந்தவர்களின் சிகிச்சைக்கான செலவையும் மத்திய பிரதேச அரசு ஏற்க உள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடியின் அலுவலகம் இன்று அறிவித்துள்ளது. "மத்தியப் பிரதேசத்தின் கார்கோனில் நடந்த பேருந்து விபத்தில் இறந்த ஒவ்வொருவரின் குடும்பங்களுக்கும் PMNRF-ல் இருந்து ரூ. 2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 வழங்கப்படும்" என்று PMO அலுவலகம் ட்வீட் செய்துள்ளது. விபத்துக்கான காரணத்தை கண்டறிய விசாரணை நடைபெற்று வருகிறது என போலீசார் தெரிவித்துள்ளனர்.