தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள்: ராஜஸ்தானை கைப்பற்றும் பாஜக, சத்தீஸ்கர், தெலுங்கானாவை வசமாக்கும் காங்கிரஸ்
தெலுங்கானாவில் 119 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு முடிந்ததை அடுத்து, 5 மாநில சட்டமன்றங்களுக்கான வாக்குப்பதிவு இன்று நிறைவடைந்தது. டிசம்பர் 3ல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில், 5 மாநிலங்களுக்கும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக, 5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் பார்க்கப்படுகிறது. மத்திய பிரதேசத்தில் ஆட்சியைப் பிடிப்பது யார்? 230 சட்டமன்ற தொகுதிகள் கொண்ட மத்திய பிரதேச மாநிலத்தில், பெரும்பான்மைக்கு 116 தொகுதிகள் தேவை. பாஜக இங்கு ஆளும் கட்சியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஜன் கி பாத் மற்றும் டிவி 9 பாரத்வர்ஷ்- போல்ஸ்ட்ராட், காங்கிரசுக்கு குறுகிய வெற்றியை கணித்திருக்கும் நிலையில், ரிபப்ளிக் டிவி- மேட்ரிஸ் கருத்துக்கணிப்பு பாஜகவிற்கு பெரும்பான்மையை வழங்கியுள்ளது.
ராஜஸ்தானில் ஆட்சியை தக்கவைக்குமா காங்கிரஸ்?
கடந்த 30 ஆண்டுகளாக ஆளும் கட்சியை மீண்டும் ஆட்சியில் அமர்த்த ராஜஸ்தான், இந்த தேர்தலிலும் அவ்வாறே வாக்களித்து இருப்பதாக கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. 199 இடங்கள் கொண்ட ராஜஸ்தான் சட்டசபையில், 100 தொகுதிகளில் வெற்றி பெறுபவர்கள் ஆட்சி அமைக்கலாம். ஜன் கி பாத், டைம்ஸ் நவ்-ETG, டிவி 9 பாரத்வர்ஷ்- போல்ஸ்ட்ராட் ஆகியவை பாஜக பெரும்பான்மை பெறும் என கணித்துள்ளனர். இம்மாநிலத்தில் உதிரி கட்சிகள் அதிகபட்சமாக 21 தொகுதிகள் வரை கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில், ஆட்சி அமைக்க அவர்களின் பங்கு காங்கிரஸ் மற்றும் பாஜகவிற்கு தேவைப்படும்.
சத்தீஸ்கர் மாநிலத்தை தக்கவைக்கும் காங்கிரஸ்
ஏபிபி செய்திகள்- சீ ஓட்டர், இந்தியா டுடே- ஆக்சிஸ் மை இந்தியா, இந்தியா டிவி- சிஎன்எக்ஸ், ஜன் கி பாத், நியூஸ் 24-டுடேஸ் சாணக்யா, ரிபப்ளிக் டிவி- மேட்ரிஸ், டிவி 9 பாரத்வர்ஷ்- போல்ஸ்ட்ராட் ஆகிய அனைத்து கருத்துக்கணிப்புகளும் காங்கிரஸ் வெற்றியை உறுதி செய்துள்ளனர். 90 தொகுதிகளை கொண்ட சத்தீஸ்கர் மாநிலத்தில், காங்கிரஸ் அதிகபட்சமாக 57 தொகுதிகளை கைப்பற்றும் என நியூஸ் 24-டுடேஸ் சாணக்யா கணித்துள்ளது.
மிசோரம் மாநிலத்தில் யார் ஆட்சி அமைக்கிறார்கள்?
மிசோரம் மாநிலத்தில் மிசோ தேசிய முன்னணி மற்றும் ஜோரம் மக்கள் இயக்கம் ஆகிய கட்சிகளிடையே கடுமையான போட்டி இருக்கும் என கணிக்கப்பட்ட நிலையில், ஜன் கி பாத் ஜோரம் மக்கள் இயக்கமும், இந்தியா டிவி- சிஎன்எக்ஸ், மிசோ தேசிய முன்னணியும் ஆட்சி அமைக்கும் எனக் கணித்துள்ளன. இரு கருத்துக்கணிப்புகளும், பாஜக அதிகபட்சமாக இரண்டு தொகுதிகளை மட்டுமே கைப்பற்றும் என கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் அதிகபட்சமாக 10 தொகுதிகளை கைப்பற்றும் என, இந்தியா டிவி- சிஎன்எக்ஸ் கணித்துள்ளது.
தெலுங்கானாவில் ஆட்சியைப் பிடிக்கும் காங்கிரஸ்
119 தொகுதிகளை கொண்ட தெலுங்கானா மாநிலத்தில், பெரும்பான்மைக்கு 60 தொகுதிகள் தேவை. ஆளும் பிஆர்எஸ், காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே மும்முனை போட்டி நிலவியது. இந்நிலையில், ஜன் கி பாத், இந்தியா டிவி- சிஎன்எக்ஸ், டிவி 9 பாரத்வர்ஷ்- போல்ஸ்ட்ராட் ஆகியவை, காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும் என கணித்துள்ளனர். இந்தியா டிவி- சிஎன்எக்ஸ், அதிகபட்சமாக காங்கிரஸ் 79 தொகுதிகளை கைப்பற்றும் என கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.