திருமணத்திற்கு ₹200 கோடி- அமலாக்கத்துறை வளையத்தில் மகாதேவ் செயலி சிக்கியதன் பின்னணி
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த திருமணத்திற்கு, ₹200 கோடி ரொக்கமாக செலவு செய்ததன் விளைவாக, தற்போது அமலாக்கத்துறை விசாரணை வளையத்தில் சிக்கியுள்ளார் மகாதேவ் செயலி உரிமையாளர் சௌரப் சந்திரகர். மகாதேவ் சூதாட்ட செயலி, துபாயை தலைமை இடமாகக் கொண்டு, இந்தியாவில் இயங்குகிறது. இதன் உரிமையாளர்களாக சௌரப் சந்திரகர் மற்றும் ரவி உப்பல் இருந்து வருகின்றனர். இந்த செயலியில் கோடிக்கணக்கில் பணம் முறைகேடு நடந்திருப்பதை அமலாக்கத்துறை கண்டறிந்தது. இதனை அடுத்து, மகாதேவ் செயலி தொடர்பான இடங்களில் சோதனை நடத்தி ₹417 கோடி ரூபாய் சொத்துக்களை முடக்கியது. மகாதேவ் செயலியை விளம்பரப்படுத்தியதற்காக நாளை(அக்டோபர் 6ம் தேதி) இந்தி நடிகர் ரன்பீர் கபூரை நேரில் ஆஜராக அமலாக்கத்துறை உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த பிப்ரவரியில் நடந்த உரிமையாளர் திருமணம்
ஐக்கிய அரபு அமீரகத்தின், ராஸ் அல் கைமா நகரில், கடந்த பிப்ரவரி மாதம் சௌரப் சந்திரகர் திருமணம் நடைபெற்றது. உறவினர்கள் அமீரகம் செல்ல விமானம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த திருமணத்தில் சில பாலிவுட் நடிகர்களின் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்த திருமணத்திற்கு மொத்தம், ₹200 கோடி செலவானதாகவும், அது ரொக்க பணமாக செலுத்தப்பட்டதாகவும் தகவல் வெளியானது. இது அமலாக்கத்துறையை மகாதேவ் செயலி பக்கம் திருப்பியது. இதை அடுத்து, கடந்த செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி, மகாதேவ் செயலி தொடர்பான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அதில், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு ₹112 கோடி ஹவாலா பணமாகவும், ₹42 கோடி பணமாக செலுத்தப்பட்டதாக அமலாக்கத்துறை கண்டறிந்தது. இது குறித்து அமலாக்கத்துறை மேலும் விசாரித்து வருகிறது.