ஹிமாச்சல் நிலச்சரிவு: 15-கிமீ டிராபிக் ஜாமால் சுற்றுலா பயணிகள் அவதி
இமாச்சல பிரதேசத்தில் உள்ள மண்டி மற்றும் குலுவை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று(ஜூன் 25) மாலை நிலச்சரிவு ஏற்பட்டதை அடுத்து, குறைந்தது 15 கி.மீ நீளத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், தங்குவதற்கு ஹோட்டல் அறைகள் ஏதும் இல்லாமல், செல்வதற்கு வேறு இடமும் இல்லாமல், சுற்றுலா பயணிகள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் அப்பகுதியில் சிக்கியுள்ளனர். இமாச்சல பிரதேசத்தில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவை தொடர்ந்து, நேற்று மாலை முதல் மண்டி மற்றும் குலுவை இணைக்கும் நெடுஞ்சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. அந்த நெடுஞ்சாலையின் குறுக்கே விழுந்து கிடக்கும் பெரும் பாறைகளை அகற்ற வெடி குண்டுகளை பயன்படுத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சுற்றுலா பயணிகள் தங்க இடம் ஏதும் இல்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர்
ஏழு-எட்டு மணிநேரத்திற்குப் பிறகுதான் இந்த சாலையில் போக்குவரத்து வாகனங்கள் அனுமதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், நெடுஞ்சாலை திறக்கப்படும் வரை பயணிகள் மண்டி பகுதியை நோக்கி நகர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். நெடுஞ்சாலையை மறைத்திருக்கும் நிலச்சரிவால் இதுவரை 500க்கும் மேற்பட்ட கார்கள் அந்த பகுதியில் சிக்கியுள்ளன. அங்கு சிக்கியுள்ள சுற்றுலா பயணிகள் தங்க இடம் ஏதும் இல்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர். இதற்கிடையில், கங்க்ரா, மண்டி மற்றும் சிர்மூர் மாவட்டங்களின் பல பகுதிகளில் தற்போது மிதமான முதல் கனமழை பெய்து வருகிறது. மேலும், ஜூன் 27 மற்றும் 28 ஆம் தேதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என உள்ளூர் வானிலை அலுவலகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.