பிக் பாஸ் 10: விஜய் சேதுபதியின் 'லீடர்ஷிப்' பேச்சு பெரும் சர்ச்சை! தவெக தலைவர் விஜய்யைத் தாக்கிப் பேசினாரா?
செய்தி முன்னோட்டம்
விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியை தொடர்ந்து 3-வது ஆண்டாக நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். 19 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த சீசனில் பிளாக் பாண்டி வெளியேறியதைத் தொடர்ந்து, தற்போது 18 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் உள்ளனர். இந்நிலையில், சனிக்கிழமை எபிசோடில் வீட்டின் முதல் தலைவரான ஷாத்திகாவின் செயல்பாடுகள் குறித்து நடிகர் விஜய் சேதுபதி பேசிய "தலைமைப் பண்பு" பற்றிய கருத்து, தற்போது மிகப்பெரிய அரசியல் மற்றும் சினிமா சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.
சர்ச்சை
சர்ச்சையை கிளப்பிய விஜய் சேதுபதியின் பேச்சு
சனிக்கிழமை எபிசோடில் போட்டியாளர்களிடம் "ஜனநாயகம் என்றால் என்ன? தலைவர் என்றால் யார்?" என்று விவாதித்த விஜய் சேதுபதி, ஷாத்திகாவின் தலைமையை விமர்சித்து பின்வருமாறு பேசினார்.
"லீடர்னா என்னவென்று தெரியாமல், லீடர்ஷிப் என்றால் என்னவென்று தெரியாமல், வாய்க்கு வந்த மாதிரி வாக்குறுதிகளை அள்ளி கொடுத்துவிட்டு; பிரச்னையும் பொறுப்பும் வரும்போது எதிரணி மேல் பழியைத் தூக்கி போட்டுவிட்டு அங்கிருந்து தெறித்து ஓடுவது லீடருக்கான தகுதி இல்லை."
தவெக
திவ்யா சத்யராஜின் பதிவும் தவெக தொண்டர்களின் கொந்தளிப்பும்
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து, நடிகர் சத்யராஜின் மகளும் திமுக ஆதரவாளருமான திவ்யா சத்யராஜ் தனது எக்ஸ்-ல்,"Leadership என்றால் என்னவென்று தவெக தற்குறிகளுக்கு பாடமெடுத்த விஜய் சேதுபதி சார்" என்று பதிவிட்டார்.
விஜய் சேதுபதி பேசியது போட்டியாளர் ஷாத்திகாவுக்காக அல்ல; அது தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யை மறைமுகமாக தாக்கி பேசிய அரசியல் காழ்ப்புணர்ச்சி என விஜய் ரசிகர்கள் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர்.
'மாஸ்டர்' படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்த விஜய் சேதுபதி, விஜய் முதலமைச்சரான பின்பு அவர் மீது மேடையில் இவ்வாறான கருத்துக்களை தெரிவிப்பது சரியல்ல என்றும், இதற்கு விஜய் சேதுபதி விரைவில் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் தவெக ஆதரவாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.