
வீர தீர சூரன் வெளியீட்டில் பிரச்னை; ஆனால் விக்ரமின் படங்கள் சர்ச்சையில் சிக்குவது இது முதல்முறையல்ல...
செய்தி முன்னோட்டம்
விக்ரமின் 'வீர தீர சூரன்' திரைப்படம் இன்று காலை வெளியாகவிருந்தது.
ஆனால், எதிர்பாராத விதமாக நேற்று படத்தை வெளியிட தடைகோரி Ivy entertainment என்ற நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது.
படத்திற்கு நிதியுதவி வழங்கி, பெருவாரியான உரிமையைப் பெற்றுள்ள தங்களிடம் உரிய எழுத்துப்பூர்வ உத்தரவுகள் பெறாமல் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டியது.
இதனையடுத்து படத்திற்கு நேற்று இடைக்கால தடை விதித்தது டெல்லி உயர்நீதிமன்றம்.
அதன்பின்னர் இன்று காலை வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், பிரச்னையை தீர்க்க தயாரிப்பாளர்கள் 7 கோடி ரூபாய் வழங்க வேண்டும் எனவும் 4 வாரங்களுக்கு படம் வெளியிட தடையும் விதித்தது.
ஆனால் விக்ரமின் படங்கள் சர்ச்சையில் சிக்கி வெளியீடு தள்ளிப்போவது இது முதல்முறையல்ல!
வெளியீடு
தொடர்ந்து வெளியீட்டு பிரெச்சனைகளில் சிக்கும் விக்ரமின் படங்கள்
விக்ரமின் படங்கள் கடந்த சில நாட்களாக வெளியீட்டு பிரச்சனைகளை சந்தித்து வருகிறது.
விக்ரமின் இரண்டாவது இன்னிங்க்ஸை தொடங்கி வைத்த 'சேது' திரைப்படமும் குறித்த நேரத்தில் முடிக்க முடியாமல், வெளியிட முடியாமல் இருந்ததாகவும், அப்போது பாலாவின் துணை இயக்குனராக இருந்த அமீர் தலையீட்டால் படம் வெளியானதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
சூப்பர்ஹிட் திரைப்படமான 'அந்நியன்' கூட வெளியீட்டு பிரச்சனைகளை சந்தித்தது.
அதே போல 10 எண்றதுக்குள்ள, இருமுகன், கோப்ரா என தொடங்கி 'தங்கலான்' மற்றும் GVM-இன் துருவ நட்சத்திரம் வரை இவரின் படங்கள் பல தடைகளை சந்தித்தே வெளியாகிறது.
இதில் ஒரு சில படங்களுக்கு அவர் தனது பிராஃபிட் ஷேரிங் சம்பளத்தில் ஒரு பாதியை விட்டு கொடுத்த பின்னரே படம் வெளியானது என்ற பேச்சும் நிலவுகிறது.
வெளியீடு
பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்தது, படம் வெளியாகிறது
நீதிமன்ற உத்தரவின்படி, ரியா ஷிபு மூன்று நாட்களுக்குள் அனைத்து செயற்கைக்கோள் உரிமைகளையும் பி4யுக்கு மாற்ற ஒப்புக்கொண்டதை அடுத்து, நீதிமன்றம் தடையை நீக்கியது.
கூடுதலாக, ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக ₹2.5 கோடி முதற்கட்டமாக வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தின் உத்தரவின்படி இரு தரப்பினரும் எழுத்துப்பூர்வ ஒப்பந்தத்தை சமர்ப்பித்ததன் மூலம், வீர தீர சூரன் பகுதி 2 அதிகாரப்பூர்வமாக வெளியிட அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து படம் இப்போது மாலை 6 மணி முதல் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இது அதன் வருகையை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.