சல்மான் கான் முதல் டைகர் ஷெராஃப் வரை: பாலிவுட் பிரபலங்களை தொடர்ந்து அச்சுறுத்தும் பிஷ்னோய் கும்பல்
செய்தி முன்னோட்டம்
பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப் மீது மும்பை ஜூஹூ பகுதியில் மர்ம நபர்கள் நடத்திய திடீர் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒட்டுமொத்த இந்திய திரையுலகையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கால்பந்து விளையாடிவிட்டு திரும்பிய டைகர் ஷெராஃபின் வாகனம் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் அவரது ஓட்டுநர் காயமடைந்த நிலையில், இந்தத் தாக்குதலுக்கு சிறையிலுள்ள தாதா லாரன்ஸ் பிஷ்னோயின் கும்பல் பகிரங்கமாக பொறுப்பேற்றுள்ளது. பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கானுடன் நட்பு வைத்துள்ள மற்றும் அவருடன் இணைந்து பணியாற்றும் பிரபலங்களை குறிவைத்து பிஷ்னோய் கும்பல் தொடர்ச்சியாக வன்முறை மற்றும் மிரட்டல் சம்பவங்களை அரங்கேற்றி வருவது மும்பையில் மீண்டும் பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
அச்சுறுத்தல்
சல்மான் கான் முதல் ஏபி தில்லான் வரை
1998-ம் ஆண்டு நிகழ்ந்த கலைமான் வேட்டை வழக்கை முன்வைத்து, சல்மான் கானை லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் தொடர்ந்து பழிவாங்கத் துடிக்கிறது.
கடந்த 2024-ல் சல்மான் கானின் பாந்த்ரா கேலக்ஸி அடுக்குமாடி இல்லத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தித் தப்பிச் சென்றனர்.
முன்னதாக 2022-ல் அவரது தந்தை சலீம் கான் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் இடத்தில், "சித்துவிற்கு நேர்ந்த கதியே உங்களுக்கும் நேரும்" என்று கையால் எழுதப்பட்ட மிரட்டல் கடிதம் வைக்கப்பட்டது.
பிரபல பஞ்சாபி பாடகர் சித்து மூஸ்வாலா 2022 மே மாதம் பிஷ்னோய் கும்பலால் கொடூரமாகச் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், கனடாவில் உள்ள பாடகர் ஏபி தில்லான் இல்லம் மற்றும் கபில் சர்மாவின் 'கேப்ஸ் கபே' மீதும் சல்மானுடன் நெருக்கமாக இருப்பதாக தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
பதற்றம்
பாலிவுட்டை உலுக்கும் தொடர் அச்சுறுத்தல்
அதேபோல், கடந்த பிப்ரவரி மாதம் பிரபல இயக்குநர் ரோஹித் ஷெட்டியின் ஜூஹூ இல்லத்தின் முன்பாக 5 ரவுண்டுகள் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கிற்கு வாட்ஸ்அப் குரல் பதிவு மூலம் ரூ. 10 முதல் 20 கோடி வரை கேட்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
"சல்மான் கானுடன் இணைந்து பணியாற்றும் சிறிய நடிகராக இருந்தாலும் சரி, தொழில்நுட்பக் கலைஞராக இருந்தாலும் சரி, யாரையும் சும்மா விடமாட்டோம்" என்று பிஷ்னோய் கும்பல் பகிரங்கமாக எச்சரித்து வரும் சூழலில், தற்போது டைகர் ஷெராஃப் மீதான இந்தத் தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது பாலிவுட் நட்சத்திரங்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும் பதற்றத்தையும் தீவிரப்படுத்தியுள்ளது.