இணையத்தில் ட்ரெண்டாகும் 'KeralaBoycottLeo' ஹேஷ்டேக் - கேரளாவில் லியோ புறக்கணிப்பு?
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் 'லியோ'. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடிக்கிறார், அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இப்படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், பிரியா ஆனந்த், மன்சூர்அலிகான், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என நான்கு மொழிகளில் வரும் அக்டோபர் 19ம் தேதி திரையரங்குகளில் மிக பிரம்மாண்டமாக ரிலீஸாகவுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் மீதான ரசிகர்களின் ஆர்வத்தினை அதிகரிக்க இப்படம் வெளியாகும் ஒவ்வொரு மொழிக்கும் தனித்தனி போஸ்டர்களை படக்குழு வெளியிட்டு ட்ரெண்ட் செய்து வந்தது.
ஒட்டுமொத்த கேரள மக்கள் விஜய் படத்தினை புறக்கணிக்கப்போவதாக தகவல்
அதன்படி, இன்றும்(செப்.,23)'லியோ' குறித்த அப்டேட் ஏதேனும் வெளியாகும் என்று ரசிகர்கள் காத்திருந்த நிலையில், #KeralaBoycottLeo என்னும் ஹேஷ்டேக் இணையத்தில் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது. அதாவது காரணமில்லாமல் விஜய் ரசிகர்கள் கேரளாவின் மலையாள சினிமா சூப்பர்ஸ்டார் மோகன்லாலை ட்ரோல் செய்து வருவதாக செய்திகள் பரப்பப்பட்டுள்ளது. இதனையறிந்த விஜய் ரசிகர்கள் குழப்பத்திலுள்ள நிலையில், இதனால் கோபமுற்ற மோகன்லால் ரசிகர்களோ விஜய்யின் 'லியோ'-படத்தினை புறக்கணிக்க வேண்டும் என்றுக்கூறி இந்த #KeralaBoycottLeo ஹேஷ்டேக்கை ட்ரெண்ட்கிறார்களாம். அதேபோல் மோகன்லால் ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த கேரளா மக்களுமே விஜய் படத்தினை புறக்கணிக்கப்போவதாக கூறியது பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் விஜய்க்கு தமிழகத்தில் உள்ளது போன்றே ரசிகர்கள் அதிகம். இதனிடையே,'லியோ' படத்திற்கு அங்கு அதிகாலை 4 மணி சிறப்பு காட்சி அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.