3டி, ஐமேக்ஸ், 38 மொழிகளில் வெளியாகும் சூர்யாவின் கங்குவா
இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில், நடிகர் சூர்யா நடித்து வரும் கங்குவா திரைப்படம், 3டி மற்றும் ஐமேக்ஸ்சில் உலகம் முழுவதும் 38 மொழிகளில் வெளியாகிறது. திரைப்படத்தின் தயாரிப்பாளரான ஞானவேல் ராஜா சமீபத்தில் அளித்த நேர்காணலில், உலகம் முழுவதும் தமிழ் சினிமா வெளியாகி வந்த நாடுகளையும் கடந்து, கங்குவா வெளியிடப்பட இருப்பதாகவும், படக்குழு விரும்பும் படி நடந்தால், திரைப்படம் தமிழ் சினிமாவிற்கு புதிய கதவுகளை திறந்து விடும் என தெரிவித்துள்ளார். சூர்யாவின் 42வது படமாக, பீரியாடிக் ஆக்சன் டிராமாவாக உருவாகும் கங்குவாவில், திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் நிலையில், படம் அடுத்த ஆண்டு கோடை காலத்தில் வெளியாகலாமென எதிர்பார்க்கப்படுகிறது.