விளையாட்டு மனதை சீர்படுத்தும்: மாஸ்டர்ஸ் தடகள விழாவில் விஜய் ஆண்டனி பேச்சு
செய்தி முன்னோட்டம்
சென்னை பெரியமேடு நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்ற சென்னை மாவட்ட மாஸ்டர்ஸ் தடகளப் போட்டியில் பங்கேற்ற நடிகர்கள் விஜய் ஆண்டனி மற்றும் சூரி, வெற்றியாளர்களுக்குப் பரிசுகளை வழங்கி விளையாட்டு மற்றும் ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் குறித்துப் பேசினர். பெரியமேட்டில் உள்ள ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கில், சென்னை மாவட்ட மாஸ்டர்ஸ் தடகள சங்கம் மற்றும் இந்திய மாஸ்டர்ஸ் அத்லெடிக் கூட்டமைப்பு இணைந்து நடத்திய சென்னை மாவட்ட மாஸ்டர்ஸ் தடகளப் போட்டி-2026 நடைபெற்றது. ஆண்கள் மற்றும் பெண்களுக்கு ஓட்டப்பந்தயம், தடை தாண்டுதல், நடைப்போட்டி, நீளம் மற்றும் உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு நடிகர்கள் விஜய் ஆண்டனி மற்றும் சூரி ஆகியோர் சான்றிதழ்களையும் விருதுகளையும் வழங்கிப் பாராட்டினர்.
வாழ்க்கையை விளையாட்டாக அணுக வேண்டும்
விஜய் ஆண்டனி அறிவுரை
பரிசளிப்பு விழாவில் பேசிய நடிகர் விஜய் ஆண்டனி, இன்றைய நவீன வாழ்க்கை முறையில் பணிச்சுமை மற்றும் மன அழுத்தங்கள் காரணமாகப் பலருக்கும் உடற்பயிற்சி செய்யவோ விளையாடவோ போதுமான நேரம் கிடைப்பதில்லை என்று குறிப்பிட்டார்.
எனவே, மனிதர்கள் தங்கள் ஒட்டுமொத்த வாழ்க்கையையுமே ஒரு விளையாட்டாக எடுத்துக்கொண்டு மனதை எப்போதும் நேர்மறையாகவும் மகிழ்ச்சியாகவும் வைத்துக்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
மேலும், விளையாட்டு என்பது மனித உடலை எவ்வாறு சீர்படுத்துகிறதோ, அதேபோன்று அது மனதையும் சீர்படுத்தி புத்துணர்ச்சி அளிக்கும். விளையாட்டில் ஈடுபடுவது சிறு குழந்தைகளுக்கு மட்டுமே உரியது என்றில்லாமல் அனைத்து வயதினரும் அதில் பங்கெடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
வயது ஒரு தடையல்ல:
75 வயது மூதாட்டியின் ஓட்டத்தைப் பாராட்டிய சூரி
தொடர்ந்து பேசிய நடிகர் சூரி, போட்டியில் பங்கேற்ற முதியவர்களின் உற்சாகமும் ஆரோக்கியமும் பார்ப்பதற்கே மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகத் தெரிவித்தார்.
இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் சிலர் தவறான பழக்கவழக்கங்களுக்கு அடிமையாகும் சூழலில், 75 வயதான மூதாட்டி ஒருவர் பந்தயத்தில் ஓடி வெற்றி பெற்றிருப்பது அடுத்த தலைமுறைக்கு ஆரோக்கியத்தின் அவசியத்தை உணர்த்தும் ஒரு சிறந்த பாடம் என்றார்.
20 வயதில் ஆரோக்கியமாக இருப்பதைவிட 60 வயதைக் கடந்தும் திடகாத்திரமாக இருப்பதே சாதனை எனக் குறிப்பிட்ட அவர், இயக்குநர் வெற்றிமாறனின் 'விடுதலை' திரைப்படத்தில் காவலராக நடித்ததன் மூலம் காவல்துறையினரின் பணிச்சுமையையும் தியாகங்களையும் தம்மால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடிந்ததாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.