LOADING...
ஷகிரா இந்திய கச்சேரி ரத்து: மும்பை, டெல்லி ரசிகர்கள் ஏமாற்றம்; காரணம் என்ன?
ஷகிரா இந்திய கச்சேரி ரத்து

ஷகிரா இந்திய கச்சேரி ரத்து: மும்பை, டெல்லி ரசிகர்கள் ஏமாற்றம்; காரணம் என்ன?

எழுதியவர் Sekar Chinnappan
Mar 22, 2026
02:33 pm

செய்தி முன்னோட்டம்

உலகப்புகழ் பெற்ற பாப் பாடகி ஷகிரா ஏப்ரல் மாதம் இந்தியாவில் நடத்தவிருந்த இசை நிகழ்ச்சிகள், மத்திய கிழக்கில் நிலவும் போர் மற்றும் பாதுகாப்பற்ற சூழல் காரணமாக காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மும்பை மற்றும் டெல்லியில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், இந்த அறிவிப்பு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. முன்னதாக, மும்பையில் ஏப்ரல் 10 (மஹாலக்ஷ்மி ரேஸ்கோர்ஸ்) அன்றும், டெல்லியில் ஏப்ரல் 15 (ஜவஹர்லால் நேரு ஸ்டேடியம்) அன்றும் 'Feeding India Concert' என்ற பெயரில் உணவு மற்றும் ஊட்டச்சத்து விழிப்புணர்வுக்காக இந்த நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

காரணம்

தள்ளிவைப்பிற்கான காரணம் என்ன?

பிப்ரவரி 28, 2026 அன்று ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்துள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதலால் ஈரான் நிலைகுலைந்துள்ள நிலையில், ஈரானின் புதிய தலைவராக முஜ்தபா காமேனி பொறுப்பேற்றுள்ளார். ஈரான் தனது பதிலடித் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளதால், சர்வதேச விமானப் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளன. குறிப்பாக, உலகின் மிக முக்கியமான எரிசக்தி வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளது உலகளாவிய பொருளாதாரப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

டிக்கெட் முன்பதிவு

டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு முக்கியத் தகவல்

இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த 'District by Zomato' நிறுவனம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது பின்வருமாறு:- டிக்கெட் வாங்கிய அனைவருக்கும் அவர்கள் செலுத்திய பணம் தானாகவே 5 முதல் 7 வேலை நாட்களுக்குள் திருப்பி அளிக்கப்படும். ஷகிரா குழுவுடன் பேசி புதிய தேதியை முடிவு செய்ய முயற்சிப்பதாகவும், சூழல் சரியானதும் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷகிராவிற்கு முன்னதாக, மார்ச் 29இல் நடக்கவிருந்த கான்யே வெஸ்ட் கச்சேரியும் மே 23க்குத் தள்ளிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement