'ராமாயணா' படத்திற்காக Tai Chi கற்ற ரன்பீர் கபூர்: பயிற்சியாளர் சந்தீப் தேசாய் பகிர்ந்த சுவாரசிய ரகசியங்கள்
செய்தி முன்னோட்டம்
நிதேஷ் திவாரி இயக்கத்தில் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடத்தி வரும் 'ராமாயணா' திரைப்படத்தில், ராமர் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக நடிகர் ரன்பீர் கபூர் மேற்கொண்ட பிரத்யேகப் பயிற்சிகள் குறித்த சுவாரசியத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பொதுவாக புராணக் கதாபாத்திரங்களில் நடிப்பவர்கள் கடுமையான உடற்பயிற்சி மற்றும் வாள்வீச்சு பயிற்சிகளில் ஈடுபடுவார்கள். ஆனால், ராமரின் கதாபாத்திரத்திற்கு தேவையான அமைதி, நளினம் மற்றும் உடல் சமநிலையை கொண்டுவர ரன்பீர் கபூர் பழங்கால சீன தற்காப்புக் கலையான டாய் சி பயிற்சியை மேற்கொண்டுள்ளார். அவருக்கு பயிற்சியளித்த இந்திய டாய் சி மாஸ்டர் சென்செய் சந்தீப் தேசாய் இதுகுறித்து பல சுவாரசிய விஷயங்களைப் பகிர்ந்துள்ளார்.
வாய்ப்பு
இன்ஸ்டாகிராம் வீடியோ மூலம் கிடைத்த வாய்ப்பு
ஹாலிவுட்டின் புகழ்பெற்ற சண்டை பயிற்சி இயக்குநர் டெர்ரி நோட்டரி, இன்ஸ்டாகிராமில் சந்தீப் தேசாயின் டாய் சி வீடியோவைப் பார்த்து வியந்து, அவரைப் படக்குழுவிற்கு பரிந்துரைத்துள்ளார்.
படக்குழுவினர் சந்தீப் தேசாயை நேரில் சந்தித்தபோது, அவர் கடுமையான முதுகுவலியால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார்.
இருப்பினும், அவர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க முழுத் தீவிரத்துடன் டாய் சி கலையை செய்து காட்டியுள்ளார்.
இதை பார்த்த டெர்ரி நோட்டரி, "இதைத்தான் நான் தேடிக்கொண்டிருந்தேன்" எனக் கூறி உடனடியாக அவரைப் படத்தில் இணைத்துக்கொண்டார்.
ராமர் கதாபாத்திரம் என்பது வெறும் உடல் வலிமையை மட்டும் காட்டுவதல்ல; அதில் ஒரு நளினம், அமைதி, கட்டுப்பாடு மற்றும் இயல்பான ஆளுமை இருக்க வேண்டும்.
டாய் சி, திரையில் அந்த அமைதியான கம்பீரத்தை கொண்டுவரும் என்பதால் டெர்ரி இதனைத் தேர்ந்தெடுத்துள்ளார்.
பயிற்சி முறை
ரன்பீர் கபூரின் அர்ப்பணிப்பு
ஆரம்பத்தில் ரன்பீர் கபூர் மற்றும் பயிற்சியாளர் சந்தீப் தேசாய் ஆகிய இருவருக்குமே ராமாயணத்திற்கும் டாய் சி கலைக்கும் என்ன தொடர்பு என்ற குழப்பம் இருந்தது.
ஆனால், டெர்ரி நோட்டரி அதன் நோக்கத்தை விளக்கியதும், ரன்பீர் கபூர் மிகுந்த ஆர்வத்துடன் இதனை கற்றுக்கொள்ளத் தொடங்கினா.
இந்தப் பயிற்சியில் 'ஹார்ஸ் ஸ்டான்ஸ்' மற்றும் சுழற்சி அசைவுகள் ஆகியவை இடம்பெற்றன.
பார்ப்பதற்கு எளிதாகத் தெரிந்தாலும், சரியான உடல் தோரணை மற்றும் சமநிலையைப் பராமரிப்பது மிகவும் சவாலானது.
நாட்கள் செல்லச்செல்ல ரன்பீர் கபூர் நடக்கும் விதத்திலும், தன்னை வெளிப்படுத்தும் விதத்திலும் ஒரு நிதானமும் அமைதியான தன்னம்பிக்கையும் வெளிப்படத் தொடங்கியதாக சந்தீப் தேசாய் பாராட்டியுள்ளார்.
ரன்பீர் கபூர் மற்றும் சுமார் 45 ஸ்டண்ட் கலைஞர்களுக்கு சந்தீப் இந்த பயிற்சியை வழங்கியுள்ளார்