ரக்ஷாபந்தன் ஸ்பெஷல்: சகோதரத்துவத்தை போற்றும் தமிழ் சினிமா பாடல்கள்
இன்று ரக்ஷாபந்தன் விழா. வடஇந்தியர்கள் இந்த நாளை கோலாகலமாக கொண்டாடி மகிழ்வது மரபு. ஆண்களையும் பெண்களையும் இணைக்கும் அன்பின் அடையாளமாகவும் மதம், சாதி போன்ற பிளவுகளை இணைக்கு பாலமாகவும் கொண்டாடப்படும் ரக்ஷாபந்தன் திருவிழா இந்தியாவின் கலாசார பெருமையை எடுத்துக்கூறும் சிறப்பான நிகழ்வுகளில் ஒன்று. ரக்ஷாபந்தன் விழா அன்று பெண்கள், தங்கள் சகோதரர்கள் மீதான அன்பை வெளிப்படுத்தும் விதமாக, அவர்கள் கரங்களில் ராக்கி கயிறு கட்டுவது வழக்கம். இக்கயிறை அணிந்துகொள்வதன் மூலம், அவர்கள் தங்கள் சகோதரிகளுக்கு பாதுகாப்பாக இருப்பார்கள் என்ற நம்பிக்கையின் அடிப்படையில், இந்த விழா நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் தமிழ் சினிமாவில் அண்ணன்- தங்கை பாசம் பேசும் பாடல்கள் பற்றி ஒரு பார்வை.
சிவாஜி கணேசன் முதல் சிவகுமார் வரை:
பிளாக் அண்ட் வைட் காலம் முதல் சகோதரத்துவத்தை போற்றும் படங்களும் பாடல்களும் வெளியாகியுள்ளன. அதிலும் குறிப்பாக சிவாஜி கணேசன்- சாவித்திரி நடித்த பாசமலர் திரைப்படம், இவர்களின் பாசத்தை பாறைசாற்ற எடுத்த ஒரு மஹாகவியம் என்றே கூறலாம். அப்போதிருந்து இப்போது வரை, அண்ணன் - தங்கை பாசத்திற்கு ஓயாமல் ஒலிக்கும் பாடல், 'மலர்ந்தும் மலராத' பாடலும், 'மலர்களை போல் தங்கை உறங்குகிறாள்' பாடலும்தான். அதேபோல எம்ஜிஆர்-ம் கூட, நினைத்ததை முடிப்பவன் படத்தில், தங்கையின் கல்யாணத்திற்காக 'பூமழை தூவி வசந்தங்கள்' என பாடியிருப்பார். '80 களின் காலகட்டத்தில் 'தென்பாண்டி தமிழே' என சிவகுமாரும், ராதிகாவும் பாடியதை யாரும் மறந்திருக்க முடியாது. படத்தின் பெயரும் 'பாச பறவைகள்'.
விஜயகாந்த் முதல் சரத்குமார் வரை
கேப்டன் விஜயகாந்த் 'சொக்கத்தங்கம்' படத்தில் பாசமிகு அண்ணனாக நடித்திருந்தை யாரும் மறந்திருக்க முடியாது. அதில் 'வெள்ளையாய் மனம்' பாடலின் இசை உங்கள் மனதை நிச்சயம் வருடியிருக்கும். தேவாவின் இசையில் உருவான இந்த பாடல், அண்ணனின் பாசத்தை போற்றும் தங்கையின் மனநிலையை கூறும் பாடலாகும். அதேபோல, 3 அண்ணன்களுக்கு இடையே வளரும் ஒரு தங்கையின் மீதுள்ள பாசத்தை எடுத்து கூறும் பாடல், சமுத்திரம் படத்தில் வந்த 'அழகான சின்ன தேவதை' பாடல். சரத்குமார், மனோஜ், முரளி ஆகியோருடன் காவேரி நடித்து, KS ரவிக்குமார் இயக்கத்தில் உருவான இந்த படத்திற்கு இசையமைத்திருந்தது சபேஷ் முரளி.
ரஜினி முதல் விஜய் வரை
அண்ணன்- தங்கை பாசம் பேசும் வேலாயுதம், திருப்பாச்சி போன்ற படங்களில் இடம்பெற்ற பாடல்கள் சூப்பர்ஹிட் ரகம். குறிப்பாக, 'வேலாயுதம்' திரைப்படத்தில் இடம்பெற்ற 'ரத்தத்தின் ரத்தமே' பாடல், விஜய் ரசிகர்களுக்காகவே உருவாக்கப்பட்டது. ரஜினிகாந்த், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான 'அண்ணாத்தே' படத்தில் இடம்பெற்ற 'என்னுயிரே' பாடல் ரஜினிகாந்தின் பாசத்தை வெளிக்காட்டும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது. அதேபோல, சிவகார்த்திகேயன் நடிப்பில் 'நம்ம வீட்டு பிள்ளை' படத்தில் இடம்பெற்ற 'உன்கூடவே பொறக்கணும்' பாடல் இன்றளவும் அண்ணன்மார்களும், தங்கைமார்களும் முணுமுணுக்கும் பாடலாகும். 'சிவப்பு மஞ்சள் பச்சை' படத்தில் இடம்பெற்ற 'ஆழி சூழ்ந்த' பாடலும் அதே போலவே பாசத்தை பொழியும் பாடலாகும். இந்த பாடல்களை உங்கள் பிளே லிஸ்ட்டில் ஏற்றி உங்கள் அண்ணன்-தங்கை பாசத்தை நினைத்து இந்த நாளை சிறப்பாக கொண்டாடுங்கள்