Thalaivar 173: ரஜினிகாந்த் - அஸ்வத் மாரிமுத்து படத்தின் படப்பிடிப்பு சத்தமில்லாமல் துவக்கம்
செய்தி முன்னோட்டம்
தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமான சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி தனது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி வருகிறார். தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் 'ஜெயிலர் 2' மற்றும் உலகநாயகன் கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்கும் படங்களுக்கு இடையே, கமல் தயாரிப்பில் நடிக்கும் படத்தின் பணிகளில் அவர் கவனம் செலுத்தி வருகிறார். ரஜினிகாந்தின் 173-வது திரைப்படத்தின் படப்பிடிப்பு எவ்வித ஆரவாரமும் இன்றி, சத்தமில்லாமல் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 'ஓ மை கடவுளே' மற்றும் 'டிராகன்' ஆகிய சூப்பர்ஹிட் படங்களை இயக்கிய இளம் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து ரஜினிகாந்தின் 173-வது படத்தை இயக்க உள்ளார் என்ற செய்தி ஏற்கனவே வெளியாகி இருந்தது. பலரும் இந்த படத்தின் அப்டேட்டுகாக காத்திருந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு தற்பொழுது தொடங்கியுள்ளது.
விவரங்கள்
தலைவர் 173 படத்தின் விவரங்கள்: இதுவரை நாம் அறிந்தவை
பிரபல இயக்குனரும் சினிமா விமர்சகருமான சித்ரா லட்சுமணன் தனது யூடியூப் பக்கத்தில் பகிர்ந்துள்ள தகவலின்படி, இப்படத்தின் முதல் காட்சியாக ஒரு பிரம்மாண்ட பாடல் காட்சி படமாக்கப்பட்டுள்ளது. சாண்டி மாஸ்டர் நடன அமைப்பில் உருவாகும் இப்பாடல் காட்சிகளில் ரஜினிகாந்த் தற்பொழுது பங்கேற்கவில்லை; அவர் இல்லாத பிற முக்கிய காட்சிகள் மட்டுமே தற்போது எடுத்து முடிக்கப்பட்டுள்ளன. இப்படத்தின் படப்பிடிப்பில் நடிகர் ரஜினிகாந்த் இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் நேரடியாகப் பங்கேற்க உள்ளதாகத் தெரிகிறது. ரஜினிகாந்தின் கால்ஷீட் கிடைத்தவுடன், அவரது காட்சிகளை மிகவும் விரைவாக எடுத்து முடிக்கப் படக்குழு திட்டமிட்டுள்ளது. இப்படத்தில் ரஜினிகாந்த் முதன்முறையாக ஒரு மருத்துவர் கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.