இங்கே ஜெயிலர் ஹிட்..அங்கே தயானந்த சரஸ்வதி ஆஸ்ரமத்தில் ரஜினி..
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், ஆண்டுதோறும், இமயமலைக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். குறிப்பாக, தான் கமிட் ஆகும் படத்தின் வேலைகள் அனைத்தையும் நிறைவு செய்துவிட்டு, ஒரு ஆன்மிக பயணமாக இமயமலைக்கு செல்வது வழக்கம். ஆனால், கடந்த 4 வருடங்களாக, கொரோனா, உடல்நிலை பாதிப்பு, அரசியல் பிரவேசம் குறித்த முடிவுகள் என பல சிக்கலில் இருந்ததால், ரஜினியால் இமயமலைக்கு செல்ல முடியவில்லை. இந்நிலையில், அவர் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில், சன் பிக்ச்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில், 'ஜெயிலர்' திரைப்படம் நேற்று வெளியானது. படம் வெளியான அனைத்து திரையரங்குகளிலும் ஹவுஸ்புல்-ஆக ஓடிக்கொண்டிருக்கிறது. படத்தின் முதல் நாள் வசூல் 100 கோடியை நெருங்கியுள்ளது என செய்திகள் தெரிவிக்கின்றன.
இமயமலையில் ரஜினி
இதனிடையே, படத்தின் ஸ்பெஷல் காட்சியை கண்டபிறகே ரஜினி இமயமலைக்கு பயணமானார் எனக்கூறப்பட்டது. இந்நிலையில் இமயமலையில் அவர் ஆன்மீக மதகுருமார்களுடன் இருக்கும் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. இமயமலையில் உள்ள பல்வேறு ஆன்மீக தலங்களுக்கு சென்ற ரஜினிகாந்த், அங்குள்ள அமைந்துள்ள சுவாமி தயானந்த சரஸ்வதி ஆசிரமத்திற்கும் சென்று, அங்குள்ளவர்களிடம் சொற்பொழிவு ஆற்றியுள்ளார். மேலும் ஆஸ்ரம வளாகத்தில் அமர்ந்து தியானம் செய்துவிட்டு, அங்கே இருப்பவர்களுடன் குழுவாக புகைப்படமும் எடுத்து கொண்டார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தனது ஆன்மீக பயணத்தை முடித்துக்கொண்டு ஒரு வாரத்தில் ரஜினி, சென்னை திரும்புவார் எனவும், அதை தொடர்ந்து, டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில், 'தலைவர் 170' திரைப்படத்தில் நடிக்க தொடங்குவர் எனவும் கூறப்படுகிறது.