இந்தியாவின் முதல் பெண் சூப்பர் ஹீரோ படம் 'மகாகாளி'யின் ஃபர்ஸ்ட்-லுக் காட்சி வெளியானது
புகழ்பெற்ற தெலுங்கு திரைப்பட இயக்குனர் பிரசாந்த் வர்மா, பிரசாந்த் வர்மா சினிமாடிக் யுனிவர்ஸ் (PVCU), மகாகாளியில் இருந்து தனது மூன்றாவது திட்டத்தை வியாழக்கிழமை வெளியிட்டார். PVCU இன் முதல் படமான ஹனு-மேன் திரைப்படம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், அதன் இரண்டாம் பாகமாக ஜெய் ஹனுமான் 2025இல் வெளியாக உள்ளது. இந்நிலையில், தற்போது மூன்றாவது படமாக மகாகாளியை இயக்குனர் பிரஷாந்த் வர்மா அறிவித்துள்ளார். மகாகாளி படத்திற்கு பிரஷாந்த் வர்மா கதை, திரைக்கதை எழுதும் நிலையில், பூஜா அபர்ணா கொல்லுரு திரைப்படத்தை இயக்குகிறார். இத்திரைப்படம் ஆன்மீகம் மற்றும் புராணக் கூறுகளுடன் சமகாலச் சிக்கல்களைக் கலந்து இருக்கும் எனத் தெரிகிறது.
மகாகாளி; காளி தேவியை மையமாக வைத்து எடுக்கப்படுகிறது
இந்தியாவின் முதல் பெண் சூப்பர் ஹீரோ படமாக மகாகாளி வரலாறு படைக்கவுள்ளது. வங்காளத்தின் வளமான கலாச்சார பின்னணியை மையமாக கொண்டு எடுக்கப்பட உள்ள இந்த படத்தின் காளியின் தோற்றத்தை சித்தரிக்கும் வகையில் கருமை நிற பெண் சூப்பர் ஹீரோ இருப்பார். இந்திய சினிமாவில் கதாநாயகி என்பதற்கு வகுத்து வைத்துள்ள வரையறைக்கு சவால் விடுவது மற்றும் அழகுத் தரங்களை மறுவரையறை செய்வதே இந்த அற்புதமான திட்டம் என படக்குழுவினர் கூறுகின்றனர். பிரஷாந்த் வரமா ஒரு படத்தின் ஃபர்ஸ்ட்-லுக் கிளிப்பை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, "மஹாகாளியின் எழுச்சியை முன்வைக்கிறோம்-தீமையின் கடுமையான அழிப்பாளரான காளி தேவியின் உருவகம்." எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஃபர்ஸ்ட்-லுக் காட்சி
வங்காளத்தின் ஆழமான வேரூன்றிய மரபுகளைப் படம்பிடிக்கும் மகாகாளி
காளி தேவியுடன் நெருங்கிய தொடர்புடைய பிராந்தியமான வங்காளத்தின் மரபுகளில் இந்தப் படம் ஆழமாக வேரூன்றி இருக்கும். படத்தின் ஃபர்ஸ்ட்-லுக் கிளிப்பில் ஒரு பெண் புலியின் தலையைத் தொடுவதைக் காட்டுகிறது. பின்னணியில் குடிசைகள் மற்றும் கடைகள் மற்றும் மக்கள் பீதியில் ஓடுகிறார்கள். எரியும் பெர்ரிஸ் சக்கரமும் தெரியும். டைட்டில் போஸ்டர் பெங்காலி எழுத்துருவில் அதன் மையத்தில் வைரம் போன்ற வடிவத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. காளி தேவியின் கடுமையான மற்றும் இரக்க குணத்தில் இருந்து உத்வேகம் பெற்று, அதிகாரம், நம்பிக்கை ஆகியவற்றின் காவியப் பயணமாக மகாகாளி இருக்கும் எனக் கூறப்படுகிறது. படத்திற்கு இசையமைப்பாளர் ஸ்மரன் சாய் இசையமைக்கிறார். ஸ்ரீ நாகேந்திர டங்களா தயாரிப்பு வடிவமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.