எம். எஸ். சுப்புலட்சுமி பெயரில் சங்கீத கலாநிதி விருதை பாடகர் டி. எம். கிருஷ்ணாவுக்கு வழங்க தடை விதித்த சென்னை உயர்நீதிமன்றம்
கர்நாடக இசை பாடகர் டி.எம். கிருஷ்ணாவுக்கு, சென்னை மியூசிக் அகாடமி இந்தாண்டுக்கான 'சங்கீத கலாநிதி' விருதை அறிவித்திருந்தது நினைவிருக்கலாம். இந்த விருதுடன் எம். எஸ். சுப்புலட்சுமி பெயரிலான ரூ. 1 லட்சம் பரிசுத்தொகையும் வழங்கப்படவிருந்தது. ஆனால், இந்த முடிவு, கர்நாடக இசைக்கலைஞர்களிடையே கடும் அதிர்ச்சியையும் மனவேதனையையும் ஏற்படுத்தியது. ஆரம்பத்தில் இசை பாடகிகளான ரஞ்சனி மற்றும் காயத்ரி தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்திய போது இந்த விவகாரம் வெளியே வந்தது. இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் MS சுப்புலக்ஷ்மி பெயரில் விருது வழங்க தடை விதித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு
ஆரம்பத்தில், எம். எஸ். சுப்புலட்சுமி குறித்து மிகவும் மோசமாக விமர்சித்தவருக்கு, அவரது பெயரில் விருது வழங்குவது எப்படி என பலர் கேள்வி எழுப்பினர். அதன் தொடர்ச்சியாக, டி.எம். கிருஷ்ணாவுக்கு விருது வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சுப்புலட்சுமியின் பேரன் சீனிவாசன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு செய்தார். இந்த மனுவை இன்று விசாரித்த சென்னை ஐகோர்ட் நீதிபதி ஜெயசந்திரன், எம். எஸ். சுப்புலட்சுமி பெயரில் விருது வழங்க மியூசிக் அகாடமிக்கு தடை விதித்து உத்தரவிட்டார். எனினும் எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயர் இல்லாமல் விருது வழங்கலாம் என்றும் தீர்ப்பளித்தார்.
Twitter Post
விருது குறித்த சர்ச்சைகள்
TM.கிருஷ்ணா கர்நாடக இசையின் மகத்துவத்தையும், புனிதத்தையும் கெடுத்து வருவதாகவும், கர்நாடக இசை முன்னோர்களை அவமதிப்பதாகவும் இசைத்துறையில் இருக்கும் சிலர் குற்றம் சாட்டினார். இந்த நிலையில் சென்னை ம்யூசிக் அகாடமி கடந்த மார்ச் மாதம் சங்கீத கலாநிதி விருதினை அறிவித்தது. இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக இசைக் கலைஞர்களான ரஞ்சனி-காயத்ரி மற்றும் ஹரிகதா விரிவுரையாளர் துஷ்யந்த் ஸ்ரீதர் ஆகியோர் மியூசிக் அகாடமி மாநாடு 2024ல் இருந்து விலகுவதாக அறிவித்தனர். இதேபோல், மற்றொரு பாடகரும் ஹரிகதா விரிவுரையாளருமான விசாகா ஹரி, இன்ஸ்டாகிராமில் தனது பதிவில்,"இந்த ஆண்டு சங்கீத கலாநிதி நியமிக்கப்பட்ட விருது பெற்றவர், பலரின் உணர்வுகளை வேண்டுமென்றே புண்படுத்தும் வகையில் செயல்பட்டுள்ளார். அதோடு, மிகப்பெரிய கலைஞர்களை பற்றி நிறைய அவதூறுகளில் ஈடுபட்டுள்ளார்" என்று எழுதினார்.