பிரபல கன்னட நடிகர் தர்ஷன் தூகுதீபா கொலை வழக்கில் கைது
பிரபல கன்னட நடிகர் தர்ஷன் தூகுதீபா, கொலை வழக்கில் பெங்களூரு போலீசாரால் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார். இப்போது, அவரது தோழியும், சக நடிகையுமான பவித்ரா கவுடாவும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார் என்று இந்தியா டுடே தெரிவித்துள்ளது. 'இவர்கள் இருவரும், மேலும் 10 பேருடன், ரேணுகா ஸ்வாமி என்ற நபரின் கொலையில் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படுகிறது. ரேணுகா ஸ்வாமியின் கொலையை மூன்று பேர் ஒப்புக்கொண்டதாகவும், தர்ஷனின் அறிவுறுத்தலின் பேரில் தாங்கள் இந்தக் குற்றத்தைச் செய்ததாகவும் கூறியதை அடுத்து இந்தச் செய்தி வந்துள்ளது. கடந்த சனிக்கிழமை (ஜூன் 9) காமக்ஷிபாளையாவில் உள்ள வாய்க்காலில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டபோது தான் இந்த கொலை சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.
கொலை செய்யப்பட்டவர் தர்ஷனின் ரசிகர்
கொலையானவர், தர்ஷனின் ரசிகர் என்று கூறப்படுகிறது. பின்னர், அவர் அப்பல்லோ பார்மசி கிளையில் பணிபுரிந்த சித்ரதுர்காவைச் சேர்ந்த 33 வயதான ரேணுகா சுவாமி என்பது அடையாளம் காணப்பட்டது. விசாரணையில், ரேணுகா சுவாமி, பவித்ரா கவுடாவுக்கு, அவதூறான மற்றும் ஆபாசமான செய்திகளை அனுப்பியுள்ளார். அதுவே அவரது கொலைக்கு வழிவகுத்திருக்கலாம். தர்ஷன், மைசூரில் உள்ள அவரது பண்ணை வீட்டில் கைது செய்யப்பட்டு, விசாரணைக்காக பெங்களூருக்கு அழைத்து வரப்பட்டார். இதற்கிடையில், அன்னபூர்ணேஸ்வரி நகர் காவல் நிலையத்தில் பவித்ராவிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. சில ஊடகங்கள் அவர் கைது செய்யப்பட்டதாக செய்தி வெளியிட்டாலும், இன்னும் அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் இல்லை.
கொலை மற்றும் விசாரணை விவரங்கள்
மைசூருவில் உள்ள தர்ஷனின் பண்ணை வீட்டில் இந்த கொலை நடந்ததாக கூறப்படுகிறது. அங்கு குற்றம் சாட்டப்பட்டவர்கள் ரேணுகா சுவாமியை சித்திரவதை செய்து கொன்றதாகக் கூறப்படுகிறது. வாய்க்காலில் பிணமாக கிடப்பது குறித்து அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்ததையடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. பிரேத பரிசோதனை மற்றும் தடயவியல் அறிக்கையில் ரேணுகா சுவாமி கொலை செய்யப்பட்டது உறுதியானது. இதற்கிடையில், தர்ஷன் முன்னிலையில் அவர் கொல்லப்பட்டதாக பல ஆதாரங்கள் குறிப்பிடுகின்றன.
தர்ஷன் சர்ச்சையில் சிக்குவது இது முதல் முறை அல்ல
தர்ஷன் தூகுதீபா பல ஆண்டுகளாக பல்வேறு சட்ட சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். க்ளூட் செய்தியின்படி, 2011 இல், அவர் தனது மனைவியிடமிருந்து குடும்ப வன்முறை குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டார். இதன் விளைவாக அவர் கைது செய்யப்பட்டு 14 நாள் நீதிமன்ற காவலில் இருந்தார். அடுத்தடுத்த ஆண்டுகளில், 2016இல் ஆட்சேபனைக்குரிய நடத்தை பற்றிய புகார்கள் மற்றும் 2021 இல் தாக்குதல் குற்றச்சாட்டுகள் உட்பட மேலும் சட்ட சிக்கல்களை அவர் எதிர்கொண்டார். 2022 ஆம் ஆண்டில், தயாரிப்பாளர் பரத், தர்ஷன் தனக்கு மிரட்டல் விடுத்ததாக காவல்துறையில் புகார் அளித்தார். அடுத்த ஆண்டு, அதிகாரிகள் தர்ஷனின் பண்ணை வீட்டில் சோதனை நடத்தி, சட்டவிரோதமாக வைத்திருந்ததாகக் கூறி, பட்டை-தலை வாத்துக்களைக் கைப்பற்றினர்.