Loading...
இந்தியாவில் பாகிஸ்தான் வெப் சீரிஸ் ஒளிபரப்பத் தடை: நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்திற்கு மத்திய அமைச்சகம் எச்சரிக்கை
இந்தியாவில் பாகிஸ்தான் வெப் சீரிஸ் ஒளிபரப்பத் தடை

இந்தியாவில் பாகிஸ்தான் வெப் சீரிஸ் ஒளிபரப்பத் தடை: நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்திற்கு மத்திய அமைச்சகம் எச்சரிக்கை

எழுதியவர் Venkatalakshmi V
Nov 26, 2026
04:00 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவில் பாகிஸ்தானை சேர்ந்த திரைப்படங்கள், வெப் சீரிஸ்கள் உள்ளிட்ட எந்தவொரு பொழுதுபோக்கு உள்ளடக்கமும் ஒளிபரப்பப்படக் கூடாது என்பதை உறுதி செய்யுமாறு நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்திற்கு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. வரும் டிசம்பர் 4-ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகவுள்ள 'ஜோ பச்சே ஹைன் சங் சமைட் லோ' என்ற பாகிஸ்தான் வெப் சீரிஸுக்கு எதிராக பல்வேறு புகார்கள் குவிந்ததைத் தொடர்ந்து மத்திய அரசு இந்தத் தலையீட்டை மேற்கொண்டுள்ளது.

அறிவுறுத்தல்

2025-ஆம் ஆண்டு அறிவுறுத்தலை நினைவூட்டிய மத்திய அமைச்சகம்

கடந்த 2025-ஆம் ஆண்டு மே 8-ஆம் தேதி மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் வெளியிட்ட சுற்றறிக்கையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்திற்கு அதிகாரிகள் மீண்டும் நினைவூட்டியுள்ளனர்.

தேசிய பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, இந்தியாவில் செயல்படும் அனைத்து ஓடிடி தளங்களும் பாகிஸ்தானைச் சேர்ந்த வெப் சீரிஸ்கள், திரைப்படங்கள், பாடல்கள் மற்றும் பாட்காஸ்ட்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என அந்த அறிவுறுத்தலில் கூறப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு ஜூன் மாதம் மத்திய அரசிடம் பதிலளித்திருந்த நெட்ஃபிளிக்ஸ், இந்தியச் சந்தாதாரர்களுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த எந்தவொரு திரைப்படமோ அல்லது தொடரோ வழங்கப்படவில்லை என உறுதியளித்திருந்தது.

தற்போது எழுந்துள்ள சர்ச்சைக்கு மத்தியில், அந்த வாக்குறுதியை நெட்ஃபிளிக்ஸ் கட்டாயம் காப்பாற்ற வேண்டும் என அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.

கடும் எதிர்ப்பு

இந்தியத் திரைப்பட அமைப்புகளின் கடும் எதிர்ப்பு

முன்னதாக, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தான் கலைஞர்கள் மற்றும் படைப்புகளுக்கு விதிக்கப்பட்ட தடையை மீறும் வகையில் இந்தத் தொடர் வெளியிடப்படுவதாகக் கூறி, அகில இந்தியத் திரைப்படத் தொழிலாளர்கள் சங்கம் (AICWA) மற்றும் மேற்கு இந்தியத் திரைப்பட ஊழியர்கள் கூட்டமைப்பு (FWICE) ஆகியவை கடும் எதிர்ப்புத் தெரிவித்தன.

பாகிஸ்தானை ஒரு பயங்கரவாத நாடு எனக் குறிப்பிட்டு பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ள அகில இந்தியத் திரைப்படத் தொழிலாளர்கள் சங்கம், இந்தத் தொடரை இந்தியாவில் முழுமையாக தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

ADVERTISEMENT

பின்னணி

சர்ச்சைக்குள்ளான வெப் சீரிஸின் பின்னணி என்ன?

மோமினா துரைத் தயாரித்து இயக்கியுள்ள 'ஜோ பச்சே ஹைன் சங் சமைட் லோ' தொடர், 2013-ஆம் ஆண்டு ஃபர்ஹத் இஷ்தியாக் எழுதிய புகழ்பெற்ற உருது நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

மூன்று தலைமுறைகளைக் கடந்து செல்லும் ஆறு காதல் கதைகளை மையமாக கொண்ட இந்தத் தொடரில் ஃபவாத் கான், மஹிரா கான், சனம் சயீத், அஹத் ரசா மிர், இக்ரா அஜீஸ், ஹானியா அமீர் மற்றும் ஹம்சா அலி அப்பாஸி உள்ளிட்ட முன்னணிப் பாகிஸ்தான் நடிகர்கள் நடித்துள்ளனர்.

அண்மையில் இதன் முன்னோட்டக் காணொளி வெளியாகி இந்தியப் பட்டியலிலும் இடம்பெற்றிருந்த நிலையில், தற்போது மத்திய அரசின் தலையீட்டால் இந்தியாவில் இத்தொடர் வெளியாகாது என்பது உறுதியாகியுள்ளது.

ADVERTISEMENT