Page Loader
'குட் பேட் அக்லி' காப்புரிமை: இளையராஜாவின் குற்றச்சாட்டுக்கு தயாரிப்பு நிறுவனம் பதில்
இளையராஜாவின் குற்றச்சாட்டுக்கு தயாரிப்பு நிறுவனம் பதில்

'குட் பேட் அக்லி' காப்புரிமை: இளையராஜாவின் குற்றச்சாட்டுக்கு தயாரிப்பு நிறுவனம் பதில்

எழுதியவர் Venkatalakshmi V
Apr 16, 2025
12:21 pm

செய்தி முன்னோட்டம்

நடிகர் அஜித் குமார் நடிப்பில் ஏப்ரல் 10 அன்று வெளியான 'குட் பேட் அக்லி' திரைப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று ரூ.160 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இப்படத்தில், த்ரிஷா, அர்ஜுன் தாஸ், சுனில், பிரசன்னா, பிரியா வாரியர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்த இத்திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்நிலையில், இசைஞானி இளையராஜா தன்னிடம் உரிய அனுமதி பெறாமல் தன்னுடைய பாடல்கள் பயன்படுத்தப்பட்டதாக 'குட் பேட் அக்லி' படத்தின் தயாரிப்பு நிறுவனத்திற்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதற்கான விளக்கத்தை படத்தயாரிப்பு குழு தற்போது வெளியிட்டுள்ளது.

வழக்கு

இளையராஜா நோட்டீசும், தயாரிப்பாளரின் விளக்கமும்

நேற்று இளையராஜா தரப்பில் அனுப்பப்பட்ட நோட்டீஸில், 'என் ஜோடி மஞ்ச குருவி', 'இளமை இதோ', 'ஒத்த ரூபாயும் தாரேன்' என்ற மூன்று பாடல்களை அவருடைய அனுமதியின்றி பயன்படுத்தியதாகக் கூறப்பட்டுள்ளது. இதற்காக ரூ.5 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றும், இந்த பாடல்களை ஒரே வாரத்தில் படம் மற்றும் அதனுடன் தொடர்புடைய அனைத்து தளங்களிலிருந்தும் நீக்க வேண்டும் என்றும், தகுந்த முறையில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்கு பதிலளித்த தயாரிப்பு தரப்பு,"குட் பேட் அக்லி படத்தில் பயன்படுத்தப்பட்ட பாடல்களுக்கு சம்பந்தப்பட்ட இசை கம்பெனிகளிடம் முறையே அனுமதி பெற்ற பிறகே பயன்படுத்தினோம். அந்த இசை நிறுவனங்களிடம் தான் காப்புரிமை இருக்கிறது. அதனால் அவர்களை தொடர்பு கொண்டு தடையில்லா சான்று பெற்றோம்" என்று தெரிவித்துள்ளது.