LOADING...
அண்ணன் ஜேசன் சஞ்சய்க்காக சிக்மா படத்தில் முதல்வர் விஜயின் மகள் செய்த முக்கிய காரியம்; ஷிவ் பண்டிட் வந்தது இப்படித்தான்
அண்ணன் ஜேசன் சஞ்சய்க்காக சிக்மா படத்தில் முதல்வர் விஜயின் மகள் செய்த முக்கிய காரியம்

அண்ணன் ஜேசன் சஞ்சய்க்காக சிக்மா படத்தில் முதல்வர் விஜயின் மகள் செய்த முக்கிய காரியம்; ஷிவ் பண்டிட் வந்தது இப்படித்தான்

எழுதியவர் Sekar Chinnappan
Jul 05, 2026
06:27 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ்நாடு முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் மற்றும் சங்கீதா தம்பதியின் மகளான திவ்யா சாஷா, எப்போதும் ஊடக வெளிச்சம் படாமல் ஒதுங்கியே இருப்பவர். லண்டனில் தனது படிப்பை முடித்துள்ள அவர், தற்பொழுது தனது அண்ணன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் சிக்மா படத்திற்காக பின்னணியில் இருந்து ஆதரவு தந்து வருகிறார். தற்பொழுது இந்த திரைப்படத்தில் பாலிவுட் மற்றும் லீலை பட புகழ் நடிகர் ஷிவ் பண்டிட் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்திருப்பதன் பின்னணியில் திவ்யா சாஷா முக்கியக் காரணமாக இருந்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.

ஷிவ் பண்டிட் தேர்வு

ஷிவ் பண்டிட்டை தேர்வு செய்யக் காரணமான சாஷாவின் ரியாக்ஷன்

இதுகுறித்து நடிகர் ஷிவ் பண்டிட் அளித்துள்ள சமீபத்திய பேட்டியில், சிக்மா படத்தில் தான் இணைந்த சுவாரஸ்யமான கதையைப் பகிர்ந்துள்ளார். இயக்குநர் ஜேசன் சஞ்சய் நீண்ட நாட்களாகத் தமிழ் சினிமாவில் ரசிகர்கள் பார்க்காத ஒரு புதுமுகத்தை இந்த கதாபாத்திரத்திற்கு தேடிக் கொண்டிருந்தார். அப்போது ஷிவ் பண்டிட்டை நடிக்க வைக்கலாம் என்ற சஞ்சயின் யோசனையைக் கேட்டதும், திவ்யா சாஷா காட்டிய அதீத உற்சாகமும் த்ரில்லான ரியாக்ஷனுமே சஞ்சய் இந்த முடிவை இறுதி செய்ய முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

கதாபாத்திரம்

சிக்மா படத்தில் ஷிவ் பண்டிட்டின் கதாபாத்திரம்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு 2025 இல் வெளியான நேசிப்பாயா படம் மூலம் தமிழ் சினிமாவிற்குத் திரும்பிய ஷிவ் பண்டிட், தற்பொழுது சிக்மா படத்தில் தமக்கு முற்றிலும் நல்லவனாகவும் இல்லாமல், கெட்டவனாகவும் இல்லாமல் பல நிறங்கள் (Shades of grey) கொண்ட ஒரு சிக்கலான கதாபாத்திரம் கிடைத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். கடந்த 2012 இல் வெளியான லீலை திரைப்படம் தமக்கு நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்தாலும், அதன் பாக்ஸ் ஆபீஸ் வசூல் எதிர்பார்த்தபடி அமையாததால் தமிழில் தமக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் தற்காலிகமாகப் பாதிக்கப்பட்டதாகவும் அவர் பகிர்ந்துள்ளார்.

Advertisement

ஜூலை 31 வெளியீடு

நட்சத்திரப் பட்டாளங்களுடன் ஜூலை 31 இல் வெளியாகும் சிக்மா

லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரிப்பில், சுந்தீப் கிஷன் மற்றும் ஃபரியா அப்துல்லா முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள சிக்மா திரைப்படம் வரும் ஜூலை 31 அன்று தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இருமொழிகளில் வெளியாகிறது. தமன் இசையமைப்பில் உருவாகியுள்ள சிக்மா ஸ்டைல் பாடலில் ஜேசன் சஞ்சயும் ஒரு சிறிய தோற்றத்தில் வருகிறார். ஒரு சுவாரஸ்யமான புதையல் வேட்டையை பின்னணியாகக் கொண்டு, மர்மம், நகைச்சுவை மற்றும் சாகசங்கள் நிறைந்த ஒரு கமர்சியல் படமாக இது உருவாகியுள்ளதாக கூறப்படும் நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகமாக உள்ளது.

Advertisement