மீண்டும் முதலமைச்சராகும் சித்தராமையா! வெள்ளித்திரையில் மாபெரும் சாதனை படைக்க வரும் புதிய படம்
செய்தி முன்னோட்டம்
கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான சித்தராமையா, புதுமுக இயக்குநர் ராஜேஷ் கௌடா இயக்கும் புதிய கன்னட திரைப்படத்தில் மீண்டும் முதலமைச்சர் கதாபாத்திரத்திலேயே நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். கர்நாடகாவில் முதலமைச்சர் டி.கே. சிவகுமார் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், எட்டு ஆண்டுகள் முதலமைச்சராக பணியாற்றிய அனுபவம் கொண்ட சித்தராமையா, வெள்ளித்திரையில் மீண்டும் முதலமைச்சராக தோன்றி தனது ஆதரவாளர்களுக்கு சர்ப்ரைஸ் அளிக்கவுள்ளார். ஆர். ஏ. பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரிக்கும் இத்திரைப்படத்திற்கு 'முக்யமந்திரி' எனப் பெயரிடப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. மேலும், முதலமைச்சர் டி.கே. சிவகுமார் மற்றும் அமைச்சர் தினேஷ் குண்டுராவ் ஆகியோரையும் கௌரவத் தோற்றத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
உலக சாதனை
48 மணி நேரத்தில் உலக சாதனைத் திட்டம்
இத்திரைப்படத்தின் திரைக்கதை எழுத்து, படப்பிடிப்பு, படத்தொகுப்பு மற்றும் திரையிடல் வரை அனைத்து பணிகளையும் வெறும் 48 மணி நேரத்திற்குள் நிறைவு செய்து புதிய உலக சாதனை படைக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
இயக்குநர் கூறிய வித்தியாசமான கதைக்களம் பிடித்திருந்ததால் சித்தராமையா உடனடியாக நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார்.
பள்ளி மற்றும் கல்லூரி காலங்களில் நாடகங்களில் நடித்து அனுபவம் கொண்ட சித்தராமையா, ஏற்கனவே 2017-ஆம் ஆண்டு கவிதா லங்கேஷ் இயக்கத்தில் வெளியான 'சம்மர் ஹாலிடேஸ்' என்ற சிறுவர் திரைப்படத்தில் முதலமைச்சராக கௌரவத் தோற்றத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்திரைப்படத்தில் முன்னாள் அமைச்சர் எச்.எம். ரேவண்ணா முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு வரும் நவம்பர் மாதத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.