பிக்பாஸ் போட்டியாளரை நம்பி மோசடியில் சிக்கிய பொதுமக்கள்; எக்ஸ் தளத்தில் இதுதான் ட்ரெண்டிங்
பிரபல யூடியூபரும், முன்னாள் இந்தி பிக் பாஸ் ஓடிடி போட்டியாளருமான அபிஷேக் மல்ஹான், ஹைபாக்ஸ் என்ற மோசடி செயலியை விளம்பரம் செய்ததாக விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார். இந்த செயலியை பயன்படுத்துபவர்கள் மல்ஹானை தவறாக வழிநடத்தியதாக குற்றம் சாட்டியுள்ளனர். இந்த சர்ச்சையானது எக்ஸ் தளத்தில் #HiBoxscam என்ற ஹேஷ்டேக் டிரெண்டிங்கிற்கும் வழிவகுத்தது. முன்னதாக, 2023இல் தொடங்கப்பட்ட ஹைபாக்ஸ் என்ற செயலியை மல்ஹான் தனது சமூக ஊடக தளங்களில் பல முறை பதிவிட்டு விளம்பரம் செய்தார். ஹைபாக்ஸ் நல்ல வருமானம் தரும் ஒரு செயலி என அவர் பதிவிட்டு வந்ததை நம்பி பலரும் அதை பதிவிறக்கி பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். ஆனால், அதை பயன்படுத்தியவர்கள் தங்கள் பணம் கிடைக்கவில்லை என குற்றம்சாட்டி வருகின்றனர்.
பயனர்களுக்கு பணத்தை தருவதாக விளக்கம் அளித்த ஹைபாக்ஸ்
பல பயனர்கள் தங்கள் விரக்தியையும் ஏமாற்றத்தையும் வெளிப்படுத்தி சமூக ஊடகங்களில் ஹைபாக்ஸுடனான தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துள்ளனர். மல்ஹானின் வீடியோக்களைப் பார்த்த பிறகு, இந்த செயலியில் ஒருவர் ₹65,000 முதலீடு செய்ததாக கூறியுள்ளார். ஆனால் தற்போது தனது பணத்தை எடுக்க செயலி அனுமதிக்கவில்லை என புகார் தெரிவித்தார். இதுபோல் பலரும் குற்றம்சாட்டி வரும் நிலையில், குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த ஹைபாக்ஸ் குழு, தங்கள் செயலியில் வித்ட்ராவல் திரும்பவும் தொடங்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த 24 மணி நேரத்திற்குள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. இதற்கிடையே, தற்போது வரை, மல்ஹான் குற்றச்சாட்டுகள் குறித்து எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.