தமிழ் சினிமாவில் பெயர்பெற்ற குரு-சிஷ்ய ஜோடிகள்
செய்தி முன்னோட்டம்
இன்று ஆசிரியர்கள் தினம். இந்நாளில், சினிமாவில் வெளியான புகழ்பெற்ற ஆசிரியர்கள் பற்றிய படங்களை பற்றி நீங்கள் நிறைய படித்திருப்பீர்கள். அதனால் இன்று, தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற குரு-சிஷ்ய ஜோடிகளை பற்றி இங்கே காணலாம்:
பாலசந்தர்- ரஜினிகாந்த்: சினிமாவில், 'இயக்குனர் இமயம்' பாலசந்தரால் பெயர்சூட்டி அறிமுகம் செய்யப்பட்டவர் ரஜினிகாந்த். பாலச்சந்தரை தனது மானசீக குருவாக ஏற்றுக்கொண்டவர்.
இளம்வயதில் மிகுந்த கோபக்காரராக அறியப்பட்ட ரஜினிகாந்த், பாலச்சந்தரின் வார்த்தைக்கு மட்டுமே கட்டுப்படுவார் என லதா ரஜினிகாந்த் ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.
ரஜினியை 'அடேய்' என அழைக்கும் உரிமை, KB-க்கு மட்டும் தான் உண்டு.
தனது வரவேற்பறையில், பாபாஜி, கிருஷ்ணன் போன்ற சுவாமி படங்களின் நடுவே, பாலசந்தர் படத்தையும் வைத்துள்ளார் ரஜினிகாந்த்.
card 2
பாலசந்தர்- கமல்ஹாசன்
கமல்- KBயின் உறவு, சினிமாவை தாண்டியது.
இதுகுறித்து, பல சந்தர்ப்பங்களில் இருவரும் பேசியிருந்தாலும், முத்தாய்ப்பாக, தனது 'ராஜ்கமல் பிலிம்ஸ்' அலுவலகத்தின் முகப்பிலேயே, KB க்கு சிலை வைத்தார் கமல்.
மற்றுமொரு சுவாரசிய தகவல் என்னவென்றால், கமல்ஹாசனை நாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்தவர் பாலசந்தர். அதேபோல, பாலசந்தர் இறுதியாக நடித்ததும், கமல்ஹாசன் தயாரிப்பில், அவர் இயக்கத்திலேயே வெளியான 'உத்தமவில்லன்' திரைப்படத்தில் தான்.
"தனது குருவிற்கு, தான் செய்யும் காணிக்கையாக இந்த படம்" என அந்த படத்தில் ஒரு வசனம் உண்டு. அதே போல நிஜத்திலும் அமைந்துவிட்டது.
card 3
பாலுமகேந்திரா- வெற்றிமாறன்
இயக்குனர் பாலுமகேந்திரா பல இளம் இயக்குனர்களை வளர்த்தவர். அதில் யாருமே சோடை போனது இல்லை. பாலா, வெற்றிமாறன், ராம் என பலரும் அவரின் பாசறையில் இருந்து வந்தவர்கள் தான்.
வெற்றிமாறன், தனது முதல் படமான 'பொல்லாதவன்' படம் முடித்த சமயம், அவரது தந்தை காலமாகிவிட்டாராம்.
அந்த வெற்றிடத்தை முழுமையாக நிரம்பியவர் பாலுமகேந்திரா தான் என பலமுறை வெற்றிமாறன் கூறியதுண்டு.
அதேபோல், பாலுமகேந்திரா மறைவிற்கு பிறகு, அவரது துணைவியாரை ஒரு மகன் ஸ்தானத்தில் இருந்து பார்த்துக்கொண்டது, அவரின் சிஷ்யர்களான பாலாவும் மற்ற துணை இயக்குனர்களும் தான். தங்கள் குருவிற்கு செய்யும் மரியாதை அது என அவர்கள் குறிப்பிட்டனர்.
card 4
பாரதிராஜா- பாக்கியராஜ்
தமிழ் சினிமாவின் முப்பெரும் இயக்குனர்களில் ஒருவரான பாரதிராஜாவின் அசிஸ்டன்ட் டைரக்டராகவும், கதை இலக்காவிலும் இடம்பெற்ற பாக்யராஜ், தான் முதல்படம் இயக்கிய பிறகும், தனது குரு பாரதிராஜா, கதை டிஸ்கஷனுக்கு அழைக்கும் போதெல்லாம் தவறாமல் கலந்துகொள்வாராம்.
இன்றும், 'எங்க டைரக்டர்' என்றுதான் அவரை குறிப்பிடுவதுண்டு, பாக்கியராஜ்.
பாரதிராஜாவால், படப்பிடிப்பிற்கு வரமுடியாத நேரத்தில் கூட, தன்னுடைய இயக்குனர் இன்று என்ன காட்சி, எப்படி படம்பிடிக்க யோசித்திருப்பார் என்பதை சரியாக கணித்து சொல்வாராம் பாக்யராஜ்.
card 5
நடன இயக்குனர் ராஜு சுந்தரம்- ஷோபி
நடன இயக்குனர், நடிகர் மற்றும் இயக்குனராக இருக்கும் ராஜு சுந்தரம் தனது நடன அமைப்பிற்காக பல விருதுகளை வென்றவர்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் நடனம் அமைத்து வரும் இவரின் நடன குழுவில் இடம் பிடித்த பலரும், தற்போது பிரபலமான நடன இயக்குனர்களாக சினிமா துறையில் பணிபுரிந்து வருகின்றனர்.
அவர்களில் குறிப்பாக ஷோபி மாஸ்டர், ஸ்ரீதர் மாஸ்டர் மற்றும் பலர், இந்திய சினிமாவின் தேடப்படும் நடன இயக்குனர்களாக உள்ளனர்.
இவர்களின், நடன அமைப்பே அவர்கள் பெயர் சொல்லும் அளவிற்கு, இவர்கள் முத்திரை பாதிக்க காரணம் அவர்களின் குருவான ராஜு சுந்தரம் மாஸ்டர் என பல பேட்டிகளில் ஷோபி மாஸ்டர் குறிப்பிட்டதுண்டு.