நடிகர் விஜய்க்கு இயக்குனர் வெற்றிமாறன் அரசியல் அட்வைஸ்
நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதற்கு முன் அவர், கள செயல்பாடுகளில் ஈடுபட வேண்டுமென, இயக்குனர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார். விஜய் அண்மைக்காலமாகவே அரசியலுக்கு வருவது போன்ற சமிக்கைகளை கொடுத்து வருகிறார். மேலும் அதற்கான ஏற்பாடுகளையும் தொடர்ந்து செய்து வருகிறார். கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், விஜய் மக்கள் இயக்கத்தினர் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தனர். கடந்த ஜூன் மாதம் 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை, சட்டமன்ற தொகுதி வாரியாக அழைத்து விஜய் கௌரவித்தார். இதனிடையே, லியோ திரைப்படத்தின் வெற்றி விழாவில், 2026 ஆம் ஆண்டு குறித்து கேட்கப்பட்டபோது, சிலமுறை கிண்டலாக பதில் அளித்த விஜய், பின்னர் 'கப்பு முக்கியம் பிகிலு' பதில் அளித்தார்.
விஜய்க்கு வெற்றிமாறன் தந்த அட்வைஸ்
விஜயின் இந்த சமீபத்திய பேச்சு வைரலான நிலையில், இது குறித்து இயக்குனர் வெற்றிமாறனிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், அரசியலுக்கு வர வேண்டும் என்ற நோக்கத்தில் விஜய் செயல்பட்டு வருவதாகவும், விஜய் அரசியலுக்கு வரட்டும் எனவும், அவர் மட்டுமல்ல யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என வெற்றிமாறன் தெரிவித்தார். மேலும், "அரசியலுக்கு வருவதற்கு முன் அவர்கள், கள செயல்பாட்டில் ஈடுபட வேண்டும் எனவும், அவரைப் பொறுத்தவரையில் அரசியல் எல்லோருக்கும் சவாலான ஒன்று" என குறிப்பிட்டவர், "அதை எதிர்கொள்ளும் மனப்பக்குவம் உள்ளவர்கள் மட்டுமே அரசியலுக்கு வர விரும்புகிறார்கள்" எனக் கூறினார். இயக்குனர் வெற்றிமாறனின் இந்த பேச்சு, ரசிகர்கள் மத்தியில் கவனிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.