நடிகர் விஷாலின் லஞ்ச குற்றச்சாட்டுக்கு, சென்சார் போர்டு பதில்
நடிகர் விஷால் சமீபத்தில் தனது மார்க் ஆண்டனி திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க ₹6.5 லட்சம் லஞ்சம் பெறப்பட்டதாக குற்றம் சாட்டி வீடியோ வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோவில் விஷால் பிரதமர் மோடியையும், மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவிடமும் இது குறித்து விசாரிக்க கோரி இருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானதை அடுத்து, மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் இந்த குற்றச்சாட்டை விசாரிக்க உயர் அதிகாரியை நியமித்திருந்தது. இந்நிலையில் இந்த குற்றச்சாட்டு குறித்து விவாதிக்க மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்தின் கூட்டம்( சிபிஎப்சி) தலைவர் பிரசூன் ஜோஷி தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது குறித்த அறிக்கையை, சிபிஎப்சி வெளியிட்டு இருக்கிறது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
பிரச்சனையின் வேர்களை கண்டுபிடிக்க சிபிஎப்சி உறுதி
"இந்த பிரச்சனையில் புகார் எடுத்துக்கொள்ளப்பட்டு துரிதமாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது". "இந்த பிரச்சனையின் வேர்களை கண்டுபிடித்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் பணம் வாங்கியவர்கள், சிபிஎப்சி அதிகாரிகள் அல்ல, அவர்கள் அங்கீகரிக்கப்படாத மூன்றாவது தரப்பைச் சேர்ந்த இடைத்தரகர்கள் எனவும் சிபிஎப்சி தரப்பில் சொல்லப்பட்டுள்ளது. திரைப்படத்தை தணிக்கை செய்ய கடைசி நேரத்தில் விண்ணப்பங்களை தயாரிப்பாளர்கள் வழங்குவதாக சிபிஎப்சி குற்றம் சாட்டியுள்ளது. "ஒரு வருடத்தில் 12,000 முதல் 18,000 திரைப்படங்கள் வரை தணிக்கை செய்கிறோம். நாங்கள் திரைப்படங்களை பார்க்கும் நேரத்தை நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும்" "சில கடினமான, நேர நெருக்கடியான சமயங்களிலும் சிபிஎப்சி சிறப்பாக செயல்பட்டு பல படங்களுக்கு சான்றிதழ் வழங்கி உள்ளது" என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.