'இன்றே விசாரணை' - நடிகர் விஷால் கொடுத்த புகாருக்கு மத்திய அரசு பதில்
விஷால்-எஸ்.ஜே.சூர்யா நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவான திரைப்படம் 'மார்க் ஆண்டனி'. இப்படம் கடந்த 15ம் தேதி தமிழில் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினையும் பெற்றது. இந்நிலையில் மும்பை சென்சார் போர்டினை சேர்ந்த அதிகாரிகள், இப்படத்தினை ஹிந்தியில் வெளியிட ரூ.6.5 லட்சம் லஞ்சம் கேட்டு பெற்றதாக நடிகர் விஷால் நேற்று(செப்.,29) எக்ஸ் பக்கத்தில் பரபரப்பான வீடியோ ஒன்றினை வெளியிட்டிருந்தார் எனத்தெரிவித்திருந்தோம். மேலும் அவர் அதில், ஹிந்தி பதிப்பில் திரையிட ரூ.3 லட்சம் மற்றும் அதற்கான சான்றிதழுக்கு ரூ.3.5 லட்சம் என மொத்தம் ரூ.6.5 லட்சம் லஞ்ச பணத்தினை இருத்தவணையாக ராஜன் என்பவரது வங்கிக்கணக்கில் செலுத்தியதாகவும் கூறியிருந்தார். தொடர்ந்து இதுகுறித்த நடவடிக்கையினை பிரதமர் மோடி மற்றும் மகாராஷ்டிரா முதல்வர் உடனடியாக எடுக்குமாறும் கேட்டுக்கொண்டிருந்தார்.
விஷாலின் புகாருக்கு பதிலளித்த மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை
இந்நிலையில், மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை தனது எக்ஸ் பக்கத்தில் இதற்கான பதிலினை பதிவு செய்துள்ளது என்று கூறப்படுகிறது. அதில், சென்சார் போர்டு ஊழல் குறித்து நடிகர் விஷால் புகாரளித்துள்ளது மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், "அரசாங்கம் ஊழலை என்றும் பொறுத்துக்கொள்ளாது. இதுகுறித்த விசாரணை மேற்கொள்ளப்படும். இந்த குற்றச்சாட்டு உறுதி செய்யப்படும் பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்". "(செப்.,29) இதற்கான விசாரணையினை மேற்கொள்ள தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை தலைமை அதிகாரி ஒருவர் மும்பைக்கு வருகை தந்துள்ளார்" என்று கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து, சென்சார் வாரியம் மூலம் ஏதேனும் பாதிப்பு நேர்ந்திருந்தால் jsfilms.inb@nic.in என்னும் மின்னஞ்சலில் புகார் தெரிவிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.