அமரன் வசூல் வேட்டை; முதல் நாள் பாக்ஸ் ஆபிஸில் இந்தியன் 2 சாதனை முறியடிப்பு
முன்னாள் இந்திய ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் உண்மைக் கதையை வைத்து எடுக்கப்பட்ட அமரன் திரைப்படம் வியாழக்கிழமை (அக்டோபர் 31) தீபாவளியை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ளது. மேஜர் முகுந்த் வரதராஜனாக நடிகர் சிவகார்த்திகேயனும், அவரது மனைவி இந்து ரெபாக்கா வர்கீஸாக சாய் பல்லவியும் நடித்துள்ளனர். ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளியான இந்த படம் தமிழகத்தில் விமர்சன ரீதியாக பாராட்டுக்களை பெற்றுள்ளதோடு, வசூல் ரீதியாகவும் புதிய சாதனைகளைப் படைத்துள்ளது. அமரன் தனது முதல் நாளில், இந்தியாவில் ₹21 கோடி சம்பாதித்தது. இது இதுவரையிலான சிவகார்த்திகேயன் படத்திற்கான அதிகபட்ச தொடக்க நாள் வருவாயாகும். சாக்நில்க் அறிக்கையின்படி, அமரன் உள்நாட்டில் முதல்நாளில் ₹21.25 கோடி வசூலித்தது. இதில் தமிழ்நாட்டிலிருந்து மட்டும் குறிப்பிடத்தக்க அளவில் ₹15 கோடி வசூலித்துள்ளது.
இந்தியன் 2 படத்தை விட அதிக வருமானம்
இந்த ஆண்டின் சிறந்த தமிழ் படங்களான விஜயின் தி கோட் மற்றும் ரஜினிகாந்தின் வேட்டையன் ஆகிய திரைப்படங்களுக்கு அடுத்து அமரன் முதல்நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் சிறப்பாக செயல்பட்டுள்ளது. அதே நேரத்தில் மாநில வருவாயில் கமல்ஹாசனின் நடிப்பில் பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரான இந்தியன் 2ஐ விட சிறப்பாக செயல்பட்டுள்ளது. குறிப்பிடத்தக்க வகையில் கமல்ஹாசனின் ராஜ்கமல் படத்தயாரிப்பு நிறுவனம்தான் அமரன் படத்தை தயாரித்துள்ளது. படத்தின் வலுவான தொடக்கம் மற்றும் பாசிட்டிவ் விமர்சனங்கள், வார இறுதி விடுமுறையில் வசூலை வாரிக் குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தீபாவளி தமிழ் வெளியீடுகளுக்கு பாரம்பரியமாக மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் சீசன் இல்லை என்றாலும், அமரனின் ஆரம்ப வெற்றி, முதல் வாரத்தில் உலகளவில் ₹100 கோடியைத் தாண்டும் திறனைக் குறிக்கிறது.