பிக் பாஸ் பிரபலம் வர்ஷினி வெங்கட் கைது: குறும்பட மோசடி மற்றும் மிரட்டல் புகாரில் சென்னை கிண்டி காவல்துறை நடவடிக்கை
செய்தி முன்னோட்டம்
விஜய் டிவியின் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சி மற்றும் 'கண்ணான கண்ணே' போன்ற சின்னத்திரை தொடர்கள் மூலம் பிரபலமான நடிகை வர்ஷினி வெங்கட், பண மோசடி மற்றும் மிரட்டல் வழக்கில் சென்னை கிண்டி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளது சினிமா மற்றும் சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிண்டியை சேர்ந்த இளைஞர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வர்ஷினி வெங்கட் குறும்படம் ஒன்று தயாரிக்கப் போவதாகவும், அதற்கு முதலீடு செய்யுமாறும் கூறியதை நம்பி, அந்த இளைஞர் ரூ.5 லட்சம் பணத்தைக் கொடுத்துள்ளார். ஆனால், வாக்குறுதி அளித்தபடி குறும்படம் தொடர்பான எந்தவொரு பணிகளும் நடைபெறவில்லை எனக் கூறப்படுகிறது.
மிரட்டல்
மிரட்டல் மற்றும் ரொக்கம், செல்போன்கள் பறிப்பு
வாக்குறுதி நிறைவேற்றப்படாததால், தான் கொடுத்த பணத்தை திருப்பித் தருமாறு அந்த இளைஞர் வர்ஷினியிடம் கேட்டுள்ளார்.
இதனால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, கிண்டி பகுதியில் வைத்து அந்த இளைஞரை மிரட்டிய வர்ஷினி மற்றும் அவரது தரப்பினர், அவரிடமிருந்த ரூ.50,000 ரொக்க பணம் மற்றும் 2 செல்போன்களை பறித்துக் கொண்டதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட இளைஞர் அளித்த புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்த கிண்டி போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தினர்.
இச்சம்பவம் தொடர்பாக வர்ஷினி வெங்கட் உட்பட 4 பேர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், வர்ஷினி வெங்கட்டை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இச்சம்பவத்தில் தொடர்புடைய மற்றவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.