ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்ச்சண்ட் திருமணம் தான் எளிமையான திருமணமாம்..எப்படி தெரியுமா?
பல மாதங்களாக நடைபெற்று வந்த அம்பானி வீட்டின் திருமண நிகழ்வு ஒரு வழியாக நிறைவுற்றது. கடந்த வெள்ளிக்கிழமை இரவு துவங்கிய இவர்களின் திருமண விழா, மூன்று நாட்களாக நீடித்தது. அதற்கு முன்னர் ப்ரீ- வெட்டிங் விழாக்கள் வேறு. மிகவும் ஆடம்பரமாக, பல திரைப்பட நட்சத்திரங்கள், பிரதமர் மோடி உட்பட அரசியல் தலைவர்கள், பிசினஸ் உலக தலைவர்கள், ஹாலிவுட் நடிகர் நடிகைகள் என கோலாகலமாக நடைபெற்றது இந்த நிகழ்ச்சிகள். இணையம், TV என எங்கு நோக்கினும் இவர்களின் திருமணத்தை பற்றியே செய்திகள் வெளியாகிய நிலையில், உலகின் பிரமாண்ட திருமணங்களில் இதுவும் ஒன்று என சந்தேகத்திற்கு இடமின்றி யாரும் சொல்வார்கள். இந்த நிலையில், உலகின் எளிமையான திருமணம் இதுதான் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?
சுமார் 5000 முதல் 5500 கோடி ரூபாய் செலவிடப்பட்டதாக கூறப்படுகிறது
ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் திருமண நிகழ்விற்கு உலக புகழ்பெற்ற பாப் பாடகர் ஜஸ்டின் பீபர் வருகை தந்து, அவர்களுக்காக பாடல் பாடினார். அவருக்கு இந்திய மதிப்பில் சுமார் 80 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது போக ப்ரீ-வெட்டிங், விருந்தினர்களுக்கு உபசரிப்பு மற்றும் திருமண செலவுகள் என்று சுமார் 5000 முதல் 5500 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது ஒரு வேளை இந்திய பொருளாதாரத்திற்கு செலவிடப்பட்டிருந்தால், நாடு வல்லரசாகும் என்பதில் சந்தேகமில்லை.
உலகின் எளிமையான திருமணமா ஆனந்த் திருமணம்?
இந்த நிலையில், இது எளிமையான கல்யாணம் என்கிறார்கள். தருண் என்கிற நிதி நிறுவனரின் கூற்றுப்படி, சராசரியாக ஒரு இந்திய குடும்பம், தங்களின் சொத்து மதிப்பில் சுமார் 10 முதல் 18 சதவிகிதத்தை தங்கள் பிள்ளைகளின் திருமணத்திற்கு செலவு செய்கின்றனர். அதாவது ஒரு கோடி சொத்து மதிப்பு இருக்கும் பெற்றோர்கள், பிள்ளைகளின் திருமணத்திற்கு 10 லட்சம் செலவு செய்வது வழக்கம். கடந்த 2023ம் ஆண்டு நிலவரப்படி, முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு சுமார் 7.65 லட்சம் கோடி. அதனால், 5500 கோடி திருமண செலவு என்பது அவரது சொத்து மதிப்பில் 0.5 சதவிகிதம் தான். அதனால், அம்பானியை பொறுத்த மட்டில் இது மிகவும் எளிமையாக நடைபெற்ற திருமணம் தான் என்கிறார் தருண்.