Page Loader
தொடரும் சர்ச்சைகள்: வெளியாகுமா 'லியோ' திரைப்படம்?
லியோ திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த, "நா ரெடி" என்ற பாடலுக்கு நடனமாடியவர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை என அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

தொடரும் சர்ச்சைகள்: வெளியாகுமா 'லியோ' திரைப்படம்?

எழுதியவர் Srinath r
Oct 15, 2023
05:16 pm

செய்தி முன்னோட்டம்

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் அக்டோபர் 19 ஆம் தேதி லியோ திரைப்படம் வெளியாகிறது. இந்நிலையில் பெரும்பான்மையான விஜய் படங்களை சர்ச்சைகள் சுற்றுவது போல் இந்த படத்தையும் சர்ச்சைகள் சுற்றி வருகிறது. லியோ திரைப்படத்தின் சிறப்பு காட்சிகளுக்கு முதலில் அனுமதி வழங்கிய தமிழ்நாடு அரசு, பின்னர் மற்றொரு அரசாணை வெளியிட்டு கட்டுப்பாடுகளை விதித்தது. இது குறித்து நேற்று கருத்து தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திமுக அரசு விஜய்க்கு வேண்டுமென்றே நெருக்கடி தருகிறது என குற்றம் சாட்டினார். இந்நிலையில் லியோ திரைப்படத்திற்கு தொடக்க முதல் தற்போது வரை எழுந்துள்ள சர்ச்சைகளை பார்க்கலாம்.

2nd card

லியோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா ரத்து

செப்டம்பர் 30ம் தேதி லியோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறும் என தகவல் வெளியானது. இசை வெளியீட்டு விழாவிற்கு, நேரு உள்விளையாட்டரங்கம் தயாராவது போன்ற புகைப்படங்களும் வெளியானது. இந்நிலையில் திடீரென பட தயாரிப்பு நிறுவனமான செவன் கிரீன் ஸ்டுடியோ, இசை வெளியீட்டு விழாவை ரத்து செய்தது. இசை வெளியீட்டு விழாவிற்கு பாஸ் கேட்டு வந்த அதிகமான கோரிக்கைகளாலும், பாதுகாப்பு காரணங்களுக்காகவும் நிகழ்ச்சியை ரத்து செய்வதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. ஆனால், இந்த அறிவிப்புக்கு பின் திமுக அரசின் அழுத்தம் இருப்பதாக சொல்லப்பட்டது. வழக்கமாக திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் அரசியல் பேசுவார், அதை தடுப்பதற்காகவே இசை வெளியீட்டு விழாவிற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்பட்டது.

3rd card

ட்ரெய்லரில் இடம் பெற்றிருந்த ஆபாச வார்த்தை

படத்தின் இசை வெளியீட்டு விழா ரத்தானதால், விஜய் ரசிகர்கள் லியோ திரைப்படத்தின் ட்ரெய்லருக்காக காத்திருந்தனர். கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்றது. அதே சமயம் ட்ரைலரில் நடிகர் விஜய் பேசியிருந்த ஆபாச வார்த்தை சர்ச்சையானது. பலரும் விஜய்க்கு எதிராக கண்டனங்களை தெரிவித்து வந்தனர்.இந்நிலையில் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், அவர்தான் விஜயை வற்புறுத்தி அந்த வார்த்தையை பேச சொன்னதாக கூறியிருந்தார். இருப்பினும் சர்ச்சை அடங்காததால், படக்குழு அந்த வார்த்தையை ட்ரெய்லரில் மியூட் செய்தது குறிப்பிடத்தக்கது.

4rd card

சிறப்புக் காட்சிக்கு கட்டுப்பாடுகள்

லியோ திரைப்படத்திற்கு சிறப்பு காட்சிகளை திரையிட அனுமதிகோரி தமிழ்நாடு அரசிடம் படக்குழு முறையிட்டது. அரசும், படம் வெளியாகும் அக்டோபர் 19 ஆம் தேதி 6 காட்சிகளுக்கும், 20- 24 ஆம் தேதி வரை 5 சிறப்பு காட்சிகளுக்கும் அனுமதி அளித்தது. இதனால் சிறப்பு காட்சிகள் அதிகாலையிலேயே தொடங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் இருந்தனர். ஆனால் அரசு வெளியிட்ட மற்றொரு அரசாணையில், சிறப்பு காட்சி காலை 9 மணிக்கு மேல் தொடங்க வேண்டும் எனவும், நள்ளிரவு 1:30 மணிக்கு காட்சிகள் முடியவேண்டும் எனவும் கட்டுப்பாடுகளை விதித்தது. மேலும் ஒவ்வொரு திரையரங்கும் ஒரு நாளைக்கு 5 காட்சிகளை மட்டுமே திரையிடவும், திரையரங்குக்கு வரும் ரசிகர்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்படுத்தவும் அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

5th card

விஜய்க்கு ஆதரவாக அரசியல் கட்சியினர்

லியோ படத்திற்கு தமிழ்நாடு அரசு விதித்திருக்கும் கட்டுப்பாடுகள் குறித்து பேசிய முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, "தமிழ்நாடு அரசு விஜயை பார்த்து பயப்படுகிறது, நடிகர்களுக்குள் ஏற்றத்தாழ்வு பார்க்கக்கூடாது. இன்று திரைத்துறையினர் என்னிடத்தில் திரைத்துறை முடங்கி இருக்கிறது எனக்கு கூறுகின்றனர்" என தெரிவித்தார். இதே விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், " லியோ திரைப்படத்தை வைத்து அரசியல் செய்யவில்லை என சொல்வதே அரசியல் தான்." "இதற்கு முன் வெளியான படங்களுக்கு ஏன் இவ்வளவு நெருக்கடி கொடுக்கவில்லை?. திரையரங்குகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடுவதெல்லாம் தேவையில்லாத வேலை" எனக் கருத்து தெரிவித்தவர் "ஜெயிலர் திரைப்படத்திற்கு ஏன் போலீஸ் பாதுகாப்பு போடவில்லை?" எனவும் வினாவினார்.