எம்ஜிஆருக்கு பின் ஏலியன் திரைப்படத்தை முயற்சித்து இருக்கிறோம்- சிவகார்த்திகேயன்
'இன்று நேற்று நாளை' இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் அயலான் திரைப்படத்தின் டீசர் நேற்று வெளியானது. இந்த டீசர் வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசிய சிவகார்த்திகேயன் இத்திரைப்படத்தில் நடித்த அனுபவங்கள் குறித்து பகிர்ந்து கொண்டார். "அயலான் திரைப்படத்தை தீபாவளிக்கு வெளியிடுவதாக சொல்லியிருந்தோம். படத்தில் சில வேலைகள் செய்ய வேண்டி இருந்ததால் பொங்கலுக்கு ஒத்தி வைத்து விட்டோம்". "இன்று நேற்று நாளை திரைப்படத்தை பார்த்ததும் ரவிக்குமாருடன் போனில் பேசினேன். என்னை பார்க்க வேண்டுமென அவர் சொன்னார்". "அவரைப் பார்க்கும் முன்னரே அவருடன் படம் செய்வது என நான் முடிவு செய்து விட்டேன். நான் உங்கள்(ரவிக்குமார்) மீது உள்ள நம்பிக்கையில் தான் அயலான் திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன்" என பேசினார்.
95 நாட்களில் எடுத்து முடிக்கப்பட்ட அயலான் திரைப்படம்
"நீங்கள் டீசரில் பார்க்காததை விட படத்தில் இன்னும் நிறைய உள்ளது. படத்தை ரவிக்குமார் வெறும் 95 நாட்களில் எடுத்து முடித்து விட்டார். அவ்வளவு தயாராக அவர் இருந்தார்." "தமிழில் எம்ஜிஆர் ஒருமுறை ஏலியன் தொடர்பான திரைப்படத்தை செய்திருந்தார். அதற்கு அடுத்து நாங்கள் முயற்சித்துள்ளோம்". "எம்ஜிஆர்க்கு பிறகு நான்தான் என்று சொன்ன சிவகார்த்திகேயன் என யூடியூபில் யாரும் வீடியோ போட்டு விட வேண்டாம்" "இப்படி ஒரு கதை அம்சத்துடன் ஒரு திரைப்படம் இந்தியாவிலேயே இல்லை. குழந்தைகளுக்கு தவறான கருத்தை இத்திரைப்படம் புகுத்தாது" என அந்த நிகழ்ச்சியில் அவர் பேசினார்.