தனது மூன்றாவது மகனுக்கு 'பவன்' என பெயர் சூட்டியுள்ளார் சிவகார்த்திகேயன்
நடிகர் சிவகார்த்திகேயன்- ஆர்த்தி தம்பதிக்கு கடந்த மாதம் மூன்றாவது குழந்தை பிறந்தது. இந்த இனிய செய்தியை தனது சமூக வலைத்தளம் மூலம் பகிர்ந்து கொண்ட சிவகார்த்திகேயன், தற்போது தனது குழந்தைக்கு பெயர் சூடிய விழா நிகழ்வின் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். தனது மூன்றாவது பிள்ளைக்கு பவன் என பெயர் சூட்டியுள்ளார் அவர். சிவகார்த்திகேயனுக்கு ஏற்கனவே ஆராதனா, குகன் என இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இதில் ஆராதனா திரைப்படத்தில் பாடல்கள் பாடியுள்ளார். வீட்டில் நெருக்கமானவர்கள் முன்னிலையில் நடைபெற்ற அந்த பெயர் சூட்டு விழாவின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இந்த நிலையில், வீடியோ வெளியிட்ட கையோடு, சிவகார்த்திகேயன் அறுபடை வீட்டில் ஒன்றான திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார்.
சிவகார்த்திகேயன் மகனுக்கு பெயர் சூட்டு விழா
SK 23 படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது
நடிகர் சிவகார்த்திகேயன் கடைசியாக 'அயலான்' படத்தில் நடித்திருந்தார். கடந்த பொங்கலுக்கு வெளியான இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. கோலிவுட்டின் முதல் சயின்ஸ்-பிக்ஷன் திரைப்படமாக இது அமைந்தது குறிப்பிடத்தக்கது. அதன் தொடர்ச்சியாக அவர் கமல்ஹாசனின் ராஜ்கமல் மூவிஸ் தயாரிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், 'அமரன்' என்ற படத்தை நடித்து முடித்துள்ளார். காஷ்மீரில் தீவிரவாதிகளை எதிர்த்து போரிட்டதில் மரித்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் இது என செய்திகள் தெரிவிக்கின்றன இப்படம் செப்டம்பரில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் சிவகார்த்தியேகனுக்கு ஜோடியாக நடித்துள்ள சாய் பல்லவி. அடுத்தாக இயக்குனர் AR முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மிக வேகமாக நடைபெற்று வருகிறது.