ரஜினியின் முத்து VS கமலின் ஆளவந்தான்!
தமிழ் சினிமாவில் இந்த வாரம் சதீஷ் நடித்துள்ள கான்ஜூரிங் கண்ணப்பன் திரைப்படம் உள்ளிட்ட 4 திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகிறது. இது தவிர ரஜினி நடித்துள்ள முத்து திரைப்படம் ரீரிலீஸ் செய்யப்படுகிறது. மேலும், கமலின் ஆளவந்தான் திரைப்படம் ரீரிலீஸ் செய்யப்படுவதால் நீண்ட நாட்களுக்கு பிறகு, ரஜினி கமல் திரைப்படங்கள் மோதுவது குறிப்பிடத்தக்கது. இந்த வாரம் வெளியாகும் தமிழ் படங்கள் மற்றும் ஓடிடி வெளியீடுகளின் தொகுப்பு. கான்ஜூரிங் கண்ணப்பன் - இயக்குனர் செல்வின் ராஜ் சேவியர் இயக்கத்தில், சதீஷ், ரெஜினா, நாசர், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இது, திகில் திரைப்படமாக உருவாகியுள்ளது. இப்படம், திரையரங்குகளில் டிசம்பர் 8ஆம் தேதி வெளியாகிறது.
திரையரங்குகளில் வெளியாகும் தமிழ் படங்கள்
துருவ நட்சத்திரம்- படம் அறிவிப்பு வெளியாகி 7 ஆண்டுகளுக்கு பின் நவம்பர் மாதம் திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் ஏற்பட்ட பல்வேறு பிரச்சனைகளால் பட வெளியீடு தள்ளி போனது. தற்போதும், டிசம்பர் 8ம் தேதி படம் வெளியாகும் எனக் கூறப்பட்டாலும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு இன்னும் வரவில்லை. தீ இவன்- கார்த்திக் முத்துராமன், சுகன்யா ஆகியோர் இப்படத்தில் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் இளவரசு, ஐஸ்வர்யா லட்சுமி, ஜான் விஜய் ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படம், டிசம்பர் 8ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
திரையரங்குகளில் வெளியாகும் தமிழ் படங்கள்
அரணம்- புதுக்கோட்டை அறந்தாங்கியில் ஜமீன்தார் தனது ஊதாரி மகன் மாயவன் மற்றும் இரண்டு வளர்ப்பு சகோதரர் மகன்களுடன் வாழ்ந்து வருகிறார். சொத்தை வளர்க்கும் மகன்களுக்கு எழுதி வைத்துவிட்டு, ஜமீன்தார் இறந்து போகிறார். ஜமீன்தார் மரணம் குறித்து வளர்ப்பு மகன்களில் ஒருவர் கண்டறிவது படத்தின் கதை. பிரியன் இயக்கிய நடித்துள்ள இப்படத்தில், வர்ஷா சரவணகுமார், லோகுபரன், கீர்த்தனா கண்ணதாசன் ஆகியோர் நடித்துள்ளனர். அவள் பெயர் ரஜினி- உடன் பிறந்தவர்களுக்குள் நடக்கும் குழப்பம் மற்றும் ஆபத்து படத்தின் கதை. வினில் ஸ்கரியா வர்கீஸ் இயக்கியுள்ள இப்படத்தில், மலையாள நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ், நமீதா பிரமோத், கருணாகரன், ரெபா மோனிகா ஜான் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படமும், டிசம்பர் 8ல் திரையரங்குகளில் வெளியாகிறது
பல வருடங்களுக்குப் பின் மோதிக் கொள்ளும் ரஜினி கமல் படங்கள்
முத்து- முப்பது ஆண்டுகளுக்குப் பின், கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த முத்து திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் கதை பலரும் அறிந்தது தான் என்றாலும், 1995க்கு பின் பிறந்து, திரையரங்கில் இப்படத்தை தவற விட்டவர்களுக்கு, திரையில் விண்டேஜ் ரஜினியை பார்க்க மீண்டும் ஒரு வாய்ப்பு. ஆளவந்தான்- கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான ஆளவந்தான் திரைப்படத்தில், கமல் இரட்டை வேடத்தில் நடித்திருப்பார். படத்தில் கமல் பல புதிய தொழில்நுட்பங்களை புகுத்தி இருந்தாலும், படம் வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை. தற்போது கல்ட் கிளாசிக்காக கொண்டாடப்படும் படம், மீண்டும் ஒருமுறை வெள்ளி திரையில் வெளியாகிறது.
இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் தமிழ் திரைப்படங்கள்
ஜப்பான்- கார்த்தி நடிப்பில் தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியான ஜப்பான் திரைப்படம், சுமாரான வெற்றியை பெற்றது. இப்படத்தில் தங்கக் கடத்தலில் ஈடுபடும் நபராக கார்த்தி நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இப்படம், டிசம்பர் 11ஆம் தேதி நெட்ஃபிலிக்ஸ் ஓடிடியில் வெளியாகிறது. ரைட் - விக்ரம் பிரபு நடிப்பில் தீபாவளிக்கு வெளியான மற்றொரு திரைப்படமான ரைட் திரைப்படமும், டிசம்பர் 8 ஆம் தேதி, ஆஹா ஓடிடியில் வெளியாகிறது. இப்படத்தில் வெங்கட் பிரபு காவல்துறை அதிகாரியாக நடித்துள்ள நிலையில், பல ஆண்டுகளுக்கு பின் ஸ்ரீதிவ்யா தமிழில் ரீ என்ட்ரி கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் தமிழ் திரைப்படங்கள்
ஜிகர்தண்டா டபுள்X - கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், எஸ்ஜே சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் இப்படத்தில் நடித்துள்ளார். தீபாவளிக்கு வெளியான படம் மாபெரும் வெற்றி பெற்று, ₹70 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. படத்தை திரையரங்குகளில் பார்த்துவிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், எஸ் ஜே சூர்யாவை 'தற்கால நடிகவேள்' என பாராட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது. அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இப்படத்தை, டிசம்பர் 8ஆம் தேதி முதல் நெட்ஃபிலிக்ஸ் ஓடிடியில் பார்க்க முடியும்.
இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் தமிழ் வெப் சீரிஸ்
கூஸ் முனிசாமி வீரப்பன்- சந்தன கடத்தல் வீரப்பன் குறித்த டாக்கோ சீரிஸ்(Docu- series) வரும் 8ஆம் தேதி ஜீ5 ஓடிடியில் வெளியாகிறது. நக்கீரன் கோபால், சீமான், என்.ராம், பா.பா.மோகன், சுப்பு என்ற சுப்ரமணியன் உள்ளிட்ட வீரப்பனுடன் தொடர்புடைய பலர், இதில் தங்கள் கருத்துக்களை பதிவு செய்துள்ளனர். இதில் வீரப்பன் குறித்து, அவரே பேசிய பல காட்சிகள் தொகுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. வடுவு- தெலுங்கு படமான இது, தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் டிசம்பர் 8 ஆம் தேதி வெளியாகிறது. நாயகியின் திருமணமும் அதை சுற்றி நடைபெறும் பிரச்சனைகள் படத்தின் கதை. அவிகா கோர், நந்து ஆகியோர் நடித்துள்ளனர்.