பிக்பாஸ் டானியலிடம் நூதன மோசடி- குத்தகைக்கு வீடு வழங்குவதாக ₹17 லட்சத்தை ஏமாற்றிய கும்பல்
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா திரைப்படம் மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலம் அடைந்த டேனியலுக்கு, குத்தகைக்கு வீடு தருவதாக கூறி பெங்களூருவைச் சேர்ந்த நிறுவனம் ₹17 லட்சம் மோசடி செய்துள்ளது. கடந்த இரண்டு வருடத்திற்கு முன், சென்னையில் 'நோ புரோக்கர்' இணையதளம் மூலம் வாடகைக்கு டேனியல் வீடு பார்த்து வந்துள்ளார். எஸ்.டி.எஸ்.கே என்ற நிறுவனம் டேனியலை தொடர்பு கொண்டு, அவர்கள் பெங்களூரைச் சேர்ந்த நிறுவனத்தின் கிளை என்றும், சென்னையில் பல இடங்களில் சொத்துக்களை பராமரித்து வருவதாகவும் கூறியுள்ளனர். மேலும் அவர்கள், தமிழ்நாடு அரசிடம் பதிவு பெற்ற ஆவணத்தையும் காண்பித்துள்ளனர். இதனை நம்பிய டேனியல் அவர்களிடம், ₹17 லட்சம் பணம் செலுத்தி வீட்டை குத்தகைக்கு பெற்றுள்ளார்.
டேனியலை ஏமாற்றிய பெங்களூர் நிறுவனம்
குத்தகை பணத்தை அந்த பெங்களூர் நிறுவனத்திடம் டேனியல் வழங்கிய நிலையில், அந்நிறுவனம் திடீரென வீட்டு உரிமையாளருக்கு டேனியல் மூலமாக வாடகை வழங்குவதாகவும், இது தற்காலிக ஏற்பாடு எனவும் கூறியுள்ளனர். டேனியல் இதற்கு சம்மதித்த நிலையில், மூன்று மாதங்கள் மட்டுமே அந்நிறுவனம் டேனியலிடம் வீட்டிற்கான வாடகையை வழங்கி உள்ளனர். பின்னர் வாடகை வழங்காமல், குத்தகை தொகையும் வழங்காமல் ஏமாற்றி விட்டனர். இது குறித்து டேனியல், சென்னை வேப்பேரியில் உள்ள காவல்துறை ஆணையரகத்தில் புகார் அளித்துள்ளார். அவர்கள் கிண்டியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கும்படி அறிவுறுத்தியுள்ளனர். பின்னர், காவல்துறையின் உதவியுடன், டேனியல் சென்னை மாநகரம் முழுவதும் அந்நிறுவனம் குறித்த தகவல்களை சேகரித்து வந்துள்ளார்.
பிரபுதேவாவின் தம்பியையும் ஏமாற்றிய பெங்களூர் நிறுவனம்
பல இடங்களில் விசாரித்த போது, டேனியலுக்கு எஸ்.டி.எஸ்.கே நிறுவனம் குறித்த திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளது. சென்னையில் இதுபோல் பலரிடம் குத்தகைக்கு வீடு வழங்குவதாக பணம் பெற்று, வீட்டின் உரிமையாளர்களுக்கு வாடகையும் வழங்காமல், வாடகைதாரர்களுக்கு குத்தகை பணமும் வழங்காமல் அந்நிறுவனம் மோசடி செய்தது தெரியவந்துள்ளது. மேலும் சமீபத்தில், நடிகர் பிரபுதேவாவின் தம்பி நாகேந்திர பிரசாத் வீட்டில், இதேபோன்று ஏற்பட்ட பிரச்சனைக்கும், இந்நிறுவனமே காரணம் என டேனியல் தெரிவித்துள்ளார். இந்த மோசடி புகாரில், காவல்துறையினர் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருவது குறிப்பிடத்தக்கது.