அமெரிக்காவில் PERM திட்ட இடைநீக்கம்: H-1B இந்திய ஊழியர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் என்ன?
செய்தி முன்னோட்டம்
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம், TCS, இன்ஃபோசிஸ், விப்ரோ, ஹெச்பிஎல், காக்னிசன்ட், கேப்ஜெமினி உள்ளிட்ட இந்திய முன்னணி ஐடி நிறுவனங்கள் மற்றும் மைக்ரோசாப்ட், அடோப் போன்ற அமெரிக்க நிறுவனங்களை 'PERM' திட்டத்தில் இருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்துள்ளது. இச்சம்பவம் எச்-1பி விசாவில் அமெரிக்காவில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான இந்திய ஊழியர்கள் மத்தியில் பெரும் கவலையையும் கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
முக்கியத்துவம்
PERM திட்டம் என்றால் என்ன? ஏன் இது முக்கியமானது?
அமெரிக்காவில் தற்காலிகமாக எச்-1பி விசாவில் பணியாற்றும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு வேலைவாய்ப்பு சார்ந்த கிரீன் கார்டு வழங்கி நிரந்தரக் குடியுரிமை பெற, முதலாளிகள் விண்ணப்பிக்கும் முதல் கட்ட அதிகாரப்பூர்வ அனுமதியே PERM ஆகும்.
ஒரு குறிப்பிட்ட பணிக்குத் தகுதியான அமெரிக்க ஊழியர்கள் யாரும் கிடைக்கவில்லை என்பதையும், வெளிநாட்டு ஊழியரை நியமிப்பதால் அமெரிக்கர்களின் ஊதியம் பாதிக்கப்படாது என்பதையும் நிறுவனம் தொழிலாளர் நலத்துறைக்கு நிரூபிக்க வேண்டும்.
இத்திட்டம் இடைநிறுத்தப்பட்டதால், பாதிக்கப்பட்ட நிறுவனங்களால் புதிய கிரீன் கார்டு விண்ணப்பங்களைச் செய்ய முடியாது.
பாதிப்பு
H-1B விசாக்கள் பாதிக்கப்படுமா?
இந்த இடைநீக்க நடவடிக்கையால் தற்போது செல்லுபடியாகும் எச்-1பி விசாவில் அமெரிக்காவில் இருக்கும் ஊழியர்களின் விசா ரத்து செய்யப்படாது.
குடிவரவு வழக்கறிஞர் கீதா தருப்ரா விளக்குகையில், "ஒரு ஊழியர் செல்லுபடியாகும் எச்-1பி அந்தஸ்தில் இருக்கும் வரை, இந்த இடைநீக்கம் அவர்களின் எச்-1பி விசாவையோ அல்லது அமெரிக்காவில் தங்கிப் பணிபுரியும் உரிமையையோ உடனடியாகப் பாதிக்காது" என்று தெரிவித்துள்ளார் என இந்தியா டுடே செய்தி தெரிவிக்கிறது
இருப்பினும், 6 ஆண்டுகால எச்-1பி விசா வரம்பை நெருங்கும் ஊழியர்களுக்கும், இன்னும் PERM விண்ணப்ப பதிவைத் தொடங்காதவர்களுக்கும் கிரீன் கார்டு பெறும் வழிமுறைகளில் பெரும் தாமதம் ஏற்படும்.
மாற்று வழிகள்
இந்தியர்களுக்கு ஏற்படும் உடனடி பாதிப்புகள் மற்றும் மாற்று வழிகள்
ஏற்கனவே EB-2 மற்றும் EB-3 கிரீன் கார்டு பிரிவுகளில் இந்தியர்கள் பல தசாப்த காலக் காத்திருப்பில் உள்ள நிலையில், இந்த இடைநீக்கம் அவர்களுக்கான காத்திருப்பு காலத்தை மேலும் அதிகரிக்கும்.
நிறுவனங்கள் தங்களின் மேலாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகளை எச்-1பி விசாவுக்கு பதிலாக L-1A விசாக்கள் மூலம் இடமாற்றம் செய்ய முயற்சிக்கலாம்.
தொடர் கெடுபிடிகள் காரணமாக ஐடி நிறுவனங்கள் அமெரிக்கக் குடிமக்களை அதிகளவில் பணியமர்த்தவோ அல்லது கிரீன் கார்டு ஸ்பான்சர்ஷிப்பை குறைக்கவோ வாய்ப்புள்ளது.
நிலுவையில் உள்ள PERM விண்ணப்பங்கள் உடனடியாக ரத்து செய்யப்படவில்லை என்றாலும், தொழிலாளர் நலத்துறையால் கடும் ஆய்வுக்கு உட்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.