14.96 பில்லியன் பரிவர்த்தனைகளுடன் ஆகஸ்ட் மாதத்தில் புதிய உச்சம் தொட்டது இந்தியா
நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (என்பிசிஐ) தரவுகளின்படி, யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) ஆகஸ்ட் 2024 இல் 14.96 பில்லியன் பரிவர்த்தனைகளுடன் ஒரு புதிய சாதனையைப் படைத்துள்ளது. இதன் மொத்த பரிவர்த்தனை மதிப்பு ₹20.61 லட்சம் கோடியை எட்டியது. இது கடந்த ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும்போது 31% அதிகரிப்பைக் காட்டுகிறது. யுபிஐ பயன்பாட்டில் ஏற்பட்டுள்ள இந்த ஏற்றம், இந்திய நுகர்வோர் மத்தியில் டிஜிட்டல் பேமெண்ட் தளங்களில் வளர்ந்து வரும் பயன்பாடு மற்றும் நம்பிக்கையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. என்பிசிஐ தரவுகளின்படி ஆகஸ்ட் மாதத்தில் சராசரி தினசரி பரிவர்த்தனை அளவு 483 மில்லியனாக இருந்தது. சராசரி தினசரி பரிவர்த்தனை மதிப்பு ₹66,475 கோடியாக இருந்தது.
நான்கு மாதங்களாக 20 லட்சத்திற்கும் மேல் பரிவர்த்தனை
சுவாரஸ்யமாக, யுபிஐ பரிவர்த்தனைகளின் மதிப்பு தொடர்ந்து நான்கு மாதங்களாக தொடர்ந்து ₹20 லட்சம் கோடிக்கு மேல் உள்ளது. ஜூலை 2024 இல் மட்டும், யுபிஐ அடிப்படையிலான பரிவர்த்தனைகள் மொத்தம் 14.44 பில்லியன் பரிவர்த்தனைகளுடன் மதிப்பு ₹20.64 லட்சம் கோடியாக இருந்தது. சராசரி தினசரி பரிவர்த்தனை அளவு 466 மில்லியனாக இருந்தது. ஒரு நாளைக்கு சராசரி பரிவர்த்தனை மதிப்பு ₹66,590 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. யுபிஐ ஆனது இப்போது ஒவ்வொரு மாதமும் ஏறக்குறைய 60 லட்சம் புதிய பயனர்களைச் சேர்க்கிறது. யுபிஐயில் ரூபே கிரெடிட் கார்டின் அறிமுகம் மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் அதன் விரிவாக்கம் ஆகியவற்றால் இந்த வளர்ச்சி அதிகமாக உள்ளது.
உலகளாவிய டிஜிட்டல் கட்டண தளங்களை விஞ்சி ஆதிக்கம்
உலகளாவிய கட்டண மையமான பேசெக்யூரின் படி, இந்த ஆண்டு ஏப்ரல்-ஜூலை காலகட்டத்தில் யுபிஐ வினாடிக்கு 3,729.1 பரிவர்த்தனைகளை செயல்படுத்தியுள்ளது. இது 2022இல் மேற்கொள்ளப்பட்ட ஒரு வினாடிக்கு 2,348 பரிவர்த்தனைகளிலிருந்து குறிப்பிடத்தக்க 58% அதிகரிப்பைக் குறிக்கிறது. இதன் மூலம், பரிவர்த்தனை அளவின் அடிப்படையில் யுபிஐ ஆனது சீனாவின் அலிபே மற்றும் பிரேசிலின் பிக்ஸ் போன்ற முன்னணி உலகளாவிய டிஜிட்டல் கட்டண தளங்களை விஞ்சியுள்ளது. டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் இந்தியா உலகில் முன்னணியில் உள்ளது. 40% க்கும் அதிகமான பணம் டிஜிட்டல் முறையில் செய்யப்படுகிறது. இதில் பெரும்பாலானவற்றுக்கு யுபிஐ பயன்படுத்தப்படுகிறது. என்பிசிஐயின் சிஇஓ திலிப் அஸ்பே, அடுத்த 10-15 ஆண்டுகளில் யுபிஐ ஆனது கடன் வளர்ச்சியின் ஆதரவுடன் 100 பில்லியன் பரிவர்த்தனைகளை எட்டும் சாத்தியம் இருப்பதாக நம்புகிறார்.
ஆர்பிஐயின் உலகளாவிய விரிவாக்கத் திட்டங்கள்
ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ், ஆர்பிஐ இப்போது பல அதிகார வரம்புகளில் இருந்து பெறப்பட்ட ஊக்கமளிக்கும் பதிலின் அடிப்படையில் யுபிஐ மற்றும் ரூபேயை உண்மையிலேயே உலகளாவியதாக மாற்றுவதில் கவனம் செலுத்துகிறது என்று கூறினார். இந்தியாவில் மட்டுமின்றி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் மலேசியா போன்ற பல்வேறு நாடுகளிலும் பணம் செலுத்த யுபிஐ பயன்படுத்தப்படுகிறது. வெளிநாட்டில் யுபிஐ போன்ற உள்கட்டமைப்பைப் பயன்படுத்துதல், சர்வதேச வணிகர்களிடம் கியூஆர் குறியீடு அடிப்படையிலான யுபிஐ கட்டண முறைகளை செயல்படுத்துதல் மற்றும் பிற நாடுகளின் வேகமான கட்டண முறைகளுடன் யுபிஐயை இணைப்பது உள்ளிட்ட முயற்சிகளில் ஆர்பிஐ கவனம் செலுத்துகிறது.