வெளிநாடுகளுக்கு அரிசி ஏற்றுமதிக்கான தடை நீக்கம்; மத்திய அரசு உத்தரவு
சனிக்கிழமையன்று (செப்டம்பர் 28), மத்திய அரசு பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான தடையை நீக்கியது மற்றும் குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை டன்னுக்கு $490 ஆக நிர்ணயித்துள்ளது. முன்னதாக, உள்நாட்டு தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக ஜூலை 20, 2023 முதல் பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசி ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசிக்கான ஏற்றுமதி (பாதி அரைக்கப்பட்ட அல்லது முழுவதுமாக அரைக்கப்பட்ட அரிசி, பாலிஷ் செய்யப்பட்டதாக இருந்தாலும் இல்லாவிட்டாலும்) தடை நீக்கப்படுகிறது. விலை குறைந்தபட்சம் டன்னுக்கு $490 என்ற விதிக்கு உட்பட்டு உடனடியாக அமலுக்கு வருகிறது." என்று தெரிவித்துள்ளது.
புழுங்கல் அரிசி மீதான வரி குறைப்பு
வெள்ளை அரிசி மட்டுமல்லாது இந்தியா சில அரிசி ஏற்றுமதி மீதான கட்டுப்பாடுகளையும் தளர்த்தியுள்ளது. இது உலகளாவிய விலையை எளிதாக்கலாம் மற்றும் சமீபத்திய தேசிய தேர்தல்களைத் தொடர்ந்து உள்நாட்டு விவசாய கொள்கைகளில் கொண்டுவரப்படும் மாற்றமாக இருக்கலாம். பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசி ஏற்றுமதிக்கான தடை நீக்கத்திற்கு முன்னதாக வெள்ளியன்று, புழுங்கல் அரிசியின் வெளிநாட்டு விற்பனை மீதான வரியை 20 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக அதிகாரிகள் குறைத்தனர். வெள்ளிக்கிழமை பிற்பகுதியில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், நிதியமைச்சகத்தின் கீழ் உள்ள வருவாய்த் துறை, பழுப்பு அரிசி மற்றும் நெல் மீதான ஏற்றுமதி வரியையும் 10 சதவீதமாகக் குறைத்துள்ளது. இந்த வகை அரிசி மற்றும் பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசிக்கு இதுவரை 20 சதவீத ஏற்றுமதி வரி விதிக்கப்பட்டிருந்தது.