ரூ.1.01 லட்சம் கோடி மதிப்பில் விவசாய வளர்ச்சிக்கு இரண்டு புதிய திட்டங்கள்; மத்திய அமைச்சரவை ஒப்புதல்
விவசாயத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட பிரதம மந்திரி ராஷ்ட்ரிய கிரிஷி விகாஸ் யோஜனா (PM-RKVY) மற்றும் தன்னிறைவுக்கான உணவுப் பாதுகாப்பை அடைவதற்கான கிருஷோன்னதி யோஜனா (KY) ஆகிய திட்டங்களுக்கு வியாழனன்று (அக்டோபர் 3) மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. அமைச்சரவை கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், இரண்டு திட்டங்களும் பயிர் மேலாண்மை மற்றும் வேளாண்துறை சார்ந்த ஸ்டார்ட்அப்களுக்கான நிதி உள்ளிட்ட விவசாய இயந்திரமயமாக்கலை ஊக்குவிக்கும் என்றார். இந்த வேளாண்மைத் திட்டங்கள் பருவநிலையை எதிர்க்கும் தன்மை, மதிப்புச் சங்கிலி மேம்பாடு மற்றும் ஸ்டார்ட்அப்கள் உள்ளிட்ட விவசாயத்துறையில் எழும் சவால்களில் கவனம் செலுத்தும் என்றார். இந்த இரண்டு திட்டங்களுக்கும் சேர்த்து மொத்தமாக ரூ.1.01 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
விவசாயத்திற்கு முன்னுரிமை
முன்னதாக, 2024-25 பட்ஜெட்டில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய நடவடிக்கைகளுக்கு ரூ.1.52 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்தார். இது முந்தைய நிதியாண்டில் ரூ.1.40 லட்சம் கோடியாக இருந்தது. 2024-25 மத்திய பட்ஜெட் ராஷ்ட்ரிய கிரிஷி விகாஸ் யோஜனா திட்டத்திற்கு ரூ. 7,550 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இது 2007இல் தொடங்கப்பட்டது. இது அறுவடைக்கு முந்தைய மற்றும் பிந்தைய உள்கட்டமைப்பை மேம்படுத்துவதன் மூலம் விவசாயம் மற்றும் அதை சார்ந்த துறைகளை மேம்படுத்துகிறது. வரவிருக்கும் கூட்டத்தில் இத்திட்டம் பிரதம மந்திரி கிரிஷி விகாஸ் யோஜனா என மறுபெயரிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேசிய உணவு பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுக்கும் கிருஷோன்னதி யோஜனா
கிருஷோன்னதி யோஜனா திட்டமானது, தேசிய உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து இயக்கம், தோட்டக்கலையின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கான திட்டம் மற்றும் வேளாண்மை விரிவாக்கத்திற்கான துணைத் திட்டம் போன்ற திட்டங்களின் மூலம் ஒட்டுமொத்த விவசாய மேம்பாட்டை ஆதரிக்கிறது. இத்திட்டம், சமையல் எண்ணெய்க்கான தேசிய மிஷன் மூலம் எண்ணெய் உற்பத்தியை அதிகரிப்பது மற்றும் டிஜிட்டல் வேளாண்மை மிஷன் மூலம் நவீன விவசாய நுட்பங்களை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. எண்ணெய் வித்து உற்பத்தியில் தன்னிறைவு அடைய, ஏழு வருடங்கள் நீடிக்கும் சமையல் எண்ணெய்கள் - எண்ணெய் வித்துக்கள் (NMEO-எண்ணெய் வித்துக்கள்) மீதான தேசிய செயல் திட்டத்திற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த முயற்சிக்காக அரசு ரூ.10,103 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.