Loading...
ஏஐ பயன்பாட்டை அதிகரித்து செயல்பாடுகளை மறுசீரமைக்கும் ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்: 340 ஊழியர்கள் பணிநீக்கம்
ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்டில் 340 ஊழியர்கள் பணிநீக்கம்

ஏஐ பயன்பாட்டை அதிகரித்து செயல்பாடுகளை மறுசீரமைக்கும் ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்: 340 ஊழியர்கள் பணிநீக்கம்

எழுதியவர் Sekar Chinnappan
Nov 27, 2026
01:01 pm

செய்தி முன்னோட்டம்

ஸ்விக்கி நிறுவனத்தின் விரைவு வர்த்தகப் பிரிவான இன்ஸ்டாமார்ட் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பப் பயன்பாட்டை அதிகரித்து செயல்பாடுகளை மறுசீரமைக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக சுமார் 340 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளது. மார்ச் 2026 நிலவரப்படி ஸ்விக்கி நிறுவனத்தில் பணியாற்றிய 8,053 ஊழியர்களில் சுமார் 4%-ஆக உள்ள இந்த ஆட்குறைப்பு முக்கியமாக இன்ஸ்டாமார்ட்டின் கார்ப்பரேட் மற்றும் சப்போர்ட் பிரிவு ஊழியர்களைப் பாதித்துள்ளது. வேலைகளில் உள்ள இரட்டிப்புத் தன்மையைக் குறைக்கவும் முடிவுகளை விரைவாக எடுக்கவும் இந்த மறுசீரமைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நஷ்டம் அதிகரிப்பு

₹895 கோடியாக அதிகரித்த நஷ்டமும் விரைவு வர்த்தக சந்தையின் கடும் போட்டியும்

விரைவு வர்த்தக சந்தையில் எட்டர்னல் நிறுவனத்தின் பிளிங்கிட் செப்டோ ஃபிளிப்கார்ட் மினிட்ஸ் மற்றும் அமேசான் நவ் ஆகிய நிறுவனங்களிடமிருந்து இன்ஸ்டாமார்ட் கடும் போட்டியை எதிர்கொண்டு வருகிறது.

கடந்த அக்டோபர் 22 அன்று வெளியிடப்பட்ட செப்டம்பர் காலாண்டு நிதி முடிவுகளின்படி இன்ஸ்டாமார்ட்டின் சரிசெய்யப்பட்ட எபிட்டா நஷ்டம் முந்தைய காலாண்டின் ₹778 கோடியிலிருந்து ₹895 கோடியாக அதிகரித்துள்ளது.

அதேநேரம் இன்ஸ்டாமார்ட்டின் நிகர ஆர்டர் மதிப்பு 13.4% உயர்ந்து ₹6,594 கோடியாகப் பதிவாகியுள்ளதோடு புதிதாக 69 டார்க் ஸ்டோர்கள் திறக்கப்பட்டு நாடு முழுவதும் மொத்த டார்க் ஸ்டோர்களின் எண்ணிக்கை 1,240 ஆக உயர்ந்துள்ளது.

சொந்த பிராண்ட்

புதிய சிஇஓ நந்திதா சின்ஹா தலைமையிலான மாற்றங்களும் சொந்த பிராண்ட் அறிமுகமும்

கடந்த ஆகஸ்ட் 3 அன்று அமிதேஷ் ஜாவுக்கு பதிலாக மிந்த்ராவின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி நந்திதா சின்ஹா இன்ஸ்டாமார்ட் சிஇஓவாக பொறுப்பேற்ற பிறகு எடுக்கப்படும் முதல் பெரிய மறுசீரமைப்பு நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது.

போட்டியாளர்களை சமாளிக்கத் தனது வணிக உத்தியை மாற்றியமைத்து வரும் இன்ஸ்டாமார்ட் சமீபத்தில் தின்பண்டங்கள் மற்றும் பானங்களுக்காக நாய்ஸ் என்ற பிராண்டையும் புதிய பழங்கள் மற்றும் காய்கறிகளுக்காக நெக்டர் என்ற சொந்த பிராண்டையும் அறிமுகப்படுத்தியது.

வெறும் அளவை விட வாடிக்கையாளர்களுக்கு சிறந்த பொருட்களைத் தேர்ந்தெடுத்து வழங்குவதே தங்கள் இலக்கு என ஸ்விக்கி சிஇஓ ஸ்ரீஹர்ஷா மஜெட்டி தெரிவித்திருந்தார்.

ADVERTISEMENT

இன்ஸ்டாமார்ட்

இன்வென்டரி-லெட் வணிக மாடலுக்கு மாறும் ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்

இந்திய உரிமையாளர் மற்றும் கட்டுப்பாட்டு நிறுவனமாக மாறியதைத் தொடர்ந்து இன்ஸ்டாமார்ட் பிரிவை இன்வென்டரி-லெட் வணிக மாடலுக்கு மாற்ற ஸ்விக்கி தயாராகி வருகிறது.

நடப்பு நிதியாண்டின் மூன்றாம் காலாண்டின் நடுப்பகுதியில் தொடங்கும் இந்த மாற்றம் முழுமையடைய 2 முதல் 3 காலாண்டுகள் ஆகும் எனப் பங்குதாரர்களுக்கு எழுதிய கடிதத்தில் ஸ்விக்கி குறிப்பிட்டுள்ளது.

இந்தப் புதிய மாடலின் மூலம் சரக்கு இருப்பு விலை நிர்ணயம் மற்றும் பொருட்கள் கிடைப்பதை தனது நேரடிக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து இன்ஸ்டாமார்ட் செயல்பாடுகளை லாபகரமாக மாற்ற நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ADVERTISEMENT