அதிக நன்கொடை அளித்த இந்தியர்கள் பட்டியலில் மூன்றாவது ஆண்டாக முதலிடம் பிடித்திருக்கும் ஷிவ் நாடார்
கடந்த நிதியாண்டில் அதிக நன்கொடை அளித்த இந்திய பணக்காரர்கள் பட்டியில் தொடர்ந்து மூன்றாவது வருடமாக முதலிடம் பிடித்திருக்கிறார் எச்சிஎல் டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் தலைவர் ஷிவ் நாடார். எடெல்கிவ் மற்றும் ஹூரன் இந்தியா ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து 2023ம் ஆண்டிற்கான இந்தப் பட்டியலை வெளியிட்டிருக்கின்றன. கடந்த நிதியாண்டில் (2022-23) ரூ.5 கோடிக்கும் மேல் நன்கொடை அளித்த 119 இந்தியர்களின் பெயர்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றிருக்கின்றன. கடந்த நிதியாண்டில் மட்டும் ரூ.2,042 கோடியை நன்கொடையாக அளித்து இந்தப் பட்டியலில் முதலிடம் பிடித்திருக்கிறார் ஷிவ் நாடார். முன்னதாக 2021-2022 மற்றும் 2020-2021 ஆகிய நிதியாண்டுகளிலும் அதிக நன்கொடை அளித்தவர்கள் பட்டியலில் இவரே முதலிடம் பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டாவது இடத்தில் அசிம் பிரேம்ஜி:
ஷிவ் நாடாரைத் தொடர்ந்து, கடந்த நிதியாண்டில் மட்டும் ரூ.1,774 கோடி நன்கொடை அளித்து இந்தப் பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்திருக்கிறார் விப்ரோ நிறுவனத் தலைவர் அசிம் பிரேம்ஜி. இந்தியாவின் முன்னணி பணக்காரரான ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி, ரூ.376 கோடி பங்களிப்புடன் மூன்றாவது இடம் பிடித்திருக்கிறார். ரூ.285 கோடி பங்களிப்புடன் அதானி வணிகக் குழும தலைவர் கௌதம் அதானி ஐந்தாவது இடத்திலும், ரூ.189 கோடி பங்களிப்புடன் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் துணை நிறுவனர் நந்தன் நிலேகனி எட்டாவது இடத்திலும் இருக்கின்றனர். இந்தப் பட்டியலின் இளம் நன்கொடையாளரான ஸெரோதா நிறுவனத்தின் துணை நிறுவனர் நிகில் காமத் கடந்த நிதியாண்டில் ரூ.110 கோடி நன்கொடை அளித்துள்ளார்.
அதிகரிக்கும் நன்கொடை அளவு:
இந்தப் பட்டியலில் ரூ.170 கோடி நன்கொடை அளித்து, கடந்த நிதியாண்டில் அதிக நன்கொடை அளித்த பெண் என்ற பெயரைப் பெற்றிருக்கிறார் நந்தன் நிலேகனியின் மனைவி ரோகினி நிலேகனி. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது, இந்த ஆண்டின் நன்கொடை அளவு 59%-மும், மூன்றாண்டுகளுக்கு முன்பு அளிக்கப்பட்டதை விட 200%-மும் உயர்ந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் 14 நபர்கள் ரூ.100 கோடிக்கும் மேலும், 24 நபர்கள் ரூ.50 கோடிக்கு மேலும், 47 நபர்கள் ரூ.20 கோடிக்கு மேலும் கடந்த நிதியாண்டில் மட்டும் நன்கொடையாக அளித்திருக்கிறார்கள். இதில் அதிகபட்ச நன்கொடையானது கல்விக்காகவே வழங்கப்பட்டிருக்கிறது. கல்வியைத் தொடர்ந்து, கலை, கலாச்சாரம் மற்றும் மருத்துவம் ஆகியவற்றுக்கு அதிக நன்கொடை வழங்கப்பட்டிருக்கிறது.