25 ஆண்டுகளில் இல்லாத தொடர் சரிவு! பங்குச் சந்தையில் வீழ்ச்சி; அந்நிய முதலீட்டாளர்கள் வெளியேற காரணம் என்ன?
செய்தி முன்னோட்டம்
இந்திய பங்குச் சந்தைகள் வியாழக்கிழமை (அக்டோபர் 1) வர்த்தக தொடக்கத்தில் கடும் சரிவை சந்தித்தன. அந்நிய நிதி நிறுவன முதலீட்டாளர்கள் (FIIs) இந்திய பங்குகளை தொடர்ச்சியாக விற்று நிதியை வெளியேற்றி வருவது முதலீட்டாளர்களின் நம்பிக்கையை கணிசமாக பாதித்துள்ளது. பிஎஸ்இ சென்செக்ஸ் 287.40 புள்ளிகள் (0.40%) சரிந்து 72,192.89 புள்ளிகளிலும், என்எஸ்இ நிஃப்டி 76.75 புள்ளிகள் (0.34%) குறைந்து 22,543.70 புள்ளிகளிலும் வர்த்தகத்தைத் தொடங்கின.
வாராந்திர சரிவு
25 ஆண்டுகளில் இல்லாத வரலாற்று வாராந்திர சரிவு
நடப்பு வாரத்தில் மட்டும் நிஃப்டி 2.6 சதவீதமும், சென்செக்ஸ் 2.3 சதவீதமும் சரிவைக் கண்டுள்ளன.
இதன் மூலம் தொடர்ச்சியாக எட்டாவது வாரமாக இந்திய பங்குச் சந்தை சரிவை நோக்கி நகர்ந்து வருகிறது.
இது கடந்த 25 ஆண்டுகளில் இந்திய சந்தை சந்திக்கும் மிக நீண்ட வாராந்திர வீழ்ச்சிப் போக்காகும்.
உள்ளூர் விடுமுறை காரணமாக நாளை (வெள்ளிக்கிழமை) இந்திய பங்குச் சந்தைகளுக்கு வர்த்தக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அந்நிய முதலீட்டாளர்கள்
₹10,000 கோடியைத் தாண்டிய அந்நிய முதலீட்டாளர்களின் விற்பனை
தற்காலிகத் தரவுகளின்படி, புதன்கிழமை ஒரே நாளில் மட்டும் அந்நிய முதலீட்டாளர்கள் ₹10,148 கோடி ($1.06 பில்லியன்) மதிப்பிலான இந்திய பங்குகளை விற்றுள்ளனர்.
கடந்த ஐந்து வர்த்தக தினங்களில் மட்டும் $3.6 பில்லியன் நிதியை அவர்கள் வெளியேற்றியுள்ளனர்.
இதன் மூலம் நடப்பு 2026-ஆம் ஆண்டில் இதுவரை மொத்தம் $27.8 பில்லியன் மதிப்பிலான பங்குகளை அந்நிய முதலீட்டாளர்கள் விற்றுள்ளது சந்தையில் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
கச்சா எண்ணெய்
கச்சா எண்ணெய் விலை மற்றும் உலகளாவிய சந்தைகளின் நிலை
ஈரான் போர் சூழல், சர்வதேச வட்டி விகிதங்கள் மற்றும் கச்சா எண்ணெய் விலையேற்றம் போன்றவை முதலீட்டாளர்களை எச்சரிக்கையுடன் செயல்பட வைத்துள்ளன.
இருப்பினும், அமெரிக்கா-ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தை சாத்தியக்கூறுகளால் பிரெண்ட் கச்சா எண்ணெய் பேரலுக்கு $98 என்ற அளவில் சற்றுச் சரிந்தது சந்தையின் பெரிய வீழ்ச்சியைத் தடுத்துள்ளது.
அதேவேளையில் ஆசிய சந்தைகளான ஜப்பானின் நிக்கேய் 2.4% உயர்ந்து வர்த்தகமான நிலையில், அமெரிக்க சந்தைகள் கலவையான முடிவுகளையே பதிவு செய்துள்ளன.