50,000 டாக்ஸி ஓட்டுநர்களை தங்கள் சேவையில் இணைக்கத் திட்டமிட்டிருக்கும் வியாடாட்ஸ்
பெங்களூருவைச் சேர்ந்த டாக்ஸி ஸ்டார்ட்அப் நிறுவனமான வியாடாட்ஸ் (viaDOTS), 2024ன் முதல் காலாண்டில் 50,000 ஓட்டுநர்களைப் தங்கள் சேவையில் சேர்க்கவிருப்பதாக அறிவித்திருக்கிறது. கடந்த இரண்டு மாதங்களில் 5,000 ஓட்டுநர்கள் வரை அந்நிறுவனத்தின் சேவையில் இணைந்திருக்கும் நிலையில், கூடுதலாகப் புதிய ஓட்டுநர்களை அதிகளவில் சேர்க்கத் திட்டமிட்டு வருகிறது வியாடாட்ஸ் நிறுவனம். தற்போதிருக்கும் டாக்ஸி சேவைகள் பயணிகள் மற்றும் வாடிக்கையாளர்களை மையாக வைத்து செயல்பட்டு வரும் நிலையில், டாக்ஸி ஓட்டுநர்களை மையமாகக் கொண்ட டாக்ஸி சேவையாக வியாடாட்ஸ் இருக்கும் எனத் தெரிவித்திருக்கிறார் அந்நிறுவனத்தின் சிஇஓ வைசாக் சிம்ஹா.
வியாடாட்ஸ் டாக்ஸி சேவை:
DOTS (Driver Operated Transport Service) என்ற மென்பொருள் மூலம் பயணிகளையும், டாக்ஸி டிரைவர்களையும் இணைக்கத் திட்டமிட்டிருக்கிறது வியாடாட்ஸ் நிறுவனம். ஒரு பயணத்திற்கான கட்டணத்தை டிஜிட்டல் மீட்டர் கொண்டு ஓட்டுநர்களே நிர்ணயம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவித்திருக்கும் இந்நிறுவனத்தின் சேவையானது, பயணிகளுக்கும் உகந்த வகையில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், பிற டாக்ஸி சேவைகளைப் போல கூடுதல் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படமாட்டாது என அந்நிறுவனம் உறுதியளித்திருக்கிறது. தற்போது, மினி கார் என்றால் கிமீ ரூ.18, செடானுக்கு கிமீ ரூ.21, எஸ்யூவிக்களுக்கு கிமீ ரூ.30 மற்றும் ப்ரீமியம் என்றால் கிமீ ரூ.40 ஆகிய கட்டணங்களைக் குறைந்தபட்சமாக நிர்ணயித்திருக்கிறது வியாடாட்ஸ்.